"எத்தனை செய்தி வந்தாலும் விழிப்புணர்வு வராது போல" என்ன விஷயம் தெரியுமா...?
மயிலாடுதுறையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல இளைஞர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல இளைஞர்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நபரை மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வெளிநாட்டு வேலை
காலம் காலமாக வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை ஏஜென்சிகள் மற்றும் பல நபர் மோசடி செய்து ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அவ்வப்போது பல செய்திகள் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வருவது, காவல்துறையினர் மற்றும் அரசு விழிப்புணர்வு செய்தாலும், இந்த மோசடி கும்பலிடம் இன்றளவும் பாமர இளைஞர்கள் முதல் மெத்த படித்தவர்கள் வரை ஏமாற்றுவது என்பது குறைந்தபாடில்லை. அது போன்ற நிகழ்வுதான் தற்போது மயிலாடுதுறையில் நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, வேலம்புதுக்குடி, நெய்வாசல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் என்பரது மகன் 26 வயதான விக்னேஷ். இவருக்கு துபாய் நாட்டில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக கூறி செம்பனார்கோவில், நேரு நகரைச் சேர்ந்த கருப்பையன் மகன் 38 வயதான அருண்குமார் என்பவர் மேற்படி விக்னேஷிடம் கூறியுள்ளார்.
எஸ்பி அலுவலகத்தில் புகார்
மேலும் அதற்காக ரூபாய் 80 ஆயிரம் பணம் பெற்று வேலை வாங்கி தராமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார். இது குறித்து தொடர்ந்து அருண்குமாரிடம் கேட்டு வந்த விக்னேஷ் தன்னிடம் அருண்குமார் மோசடி செய்துள்ளதை உணர்ந்தார். இதனை அடுத்து இது தொடர்பாக விக்னேஷ் மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஏமாற்றப்பட்ட இளைஞர்கள்
அந்த புகார் மனு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதன்படி அந்த புகார் மனு தொடர்பான விசாரணையை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னக்கொடி மேற்கொண்டார். விசாரணையில் மேற்படி அருண்குமார் துபாய் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விக்னேஷ் போன்று மேலும் 12 நபர்களிடம் ரூபாய் 15,19,000/- (பதினைந்து லட்சத்து பத்தொன்பதாயிரம்) பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு
இதனை அடுத்து அருண்குமார் மீது மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவில், நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வந்த இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அருண்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்னக்கொடி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
எஸ்.பி. எச்சரிக்கை
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு எதிரியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னக்கொடி மற்றும் மேற்படி வழக்கின் விசாரணையை மேற்பார்வை செய்த துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழ்வாணன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார். மேலும், விசாரணையை விரைந்து முடித்து, எதிரியின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தல் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இதுபோன்று வெளிநாட்டில் வேலைக்கு செல்லவும், தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கவும் அது தொடர்பான முழு விபரங்களை கேட்டறியாமல் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்ட அவர், இது போன்று பணம் போசடியில் ஈடுபடும் நபர்கள் மீது தீவிர சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






















