அரசு நிகழ்ச்சியில் சைகை மொழி பெயர்ப்பு; மகிழ்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளிகள் - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி
மயிலாடுதுறையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2641 பயனாளிகளுக்கு 2 கோடியே 13 இலட்சத்து 79 ஆயிரத்து 184 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 2641 பயனாளிகளுக்கு 2 கோடியே 13 லட்சத்து 79 ஆயிரத்து 184 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் இன்று கூட்டாக வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: மக்களுடன் முதல்வர் திட்டம் மக்களுக்கு சென்றடைய வேண்டி சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு அவற்றை விரைவாக கொண்டு சேர்க்கவும், “மக்களுடன் முதல்வர்" என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்துவதன் மூலம் மனுக்கள் பெறப்பட்டு குறிப்பிட்ட கால அளவிற்குள் இச்சேவைகளை வழங்கி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டத்தில் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு, அதன் அடிப்படையில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக மனுக்களை பெற்றிட, சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து கோரிக்கைகளை பெற அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
மக்களுடன் முதல்வர் திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 -ம் தேதி முதல் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 6 -ம் தேதி வரை மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சி பகுதிகளிலும் மற்றும் மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய நான்கு பேரூராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. ஒவ்வொரு நகராட்சிகளுக்கும் 6 முகாம்கள் வீதம் மொத்தம் 12 முகாம்களும், ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் 2 முகாம்கள் வீதம் மொத்தம் 8 முகாம்களும் மொத்தமாக 10 நாட்களுக்கு 20 முகாம்கள் நடத்தப்பட்டது.
10 நாட்களாக நடைப்பெற்ற இந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை 3010 அவற்றில் ஏற்பளிக்கப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை 2641 ஆகும். அதன்படி, ஏற்பளிக்கப்பட்ட மனுக்களுக்கு இன்றைய தினம் 2 கோடியே 13 லட்சத்து 79 ஆயிரத்து 184 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை, பேரூராட்சி, நகராட்சி, தொழிலாளர் நலவாரியம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகள் சார்பில் பட்டா மாற்று ஆணைகள், இலவச வீட்டுமனை பட்டா, புதிய மின் இணைப்பு பெயர் மாற்று ஆணைகள், தொழில் தொடங்க கடனுதவிகள், வீட்டுவரி பெயர் மாற்ற ஆணைகள், தொழிலாளர் நல வாரிய அடைய அட்டைகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் அரசு நிகழ்ச்சியில் முதல் முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கும் மேடையில் பேசுவதை புரிந்து கொள்ளும் வகையில் சைகை மொழி பெயர்ப்பாளர் மூலம் சைகை மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. இந்து மாற்றுத்திறனாளி மட்டும் இன்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம் , மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா உள்ளிட்ட பல்வேறு கலந்து கொண்டனர்.