3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண் பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் கைவினை கலைஞர்....!
மயிலாடுதுறையில் களிமண் பொம்மைகள் தயாரிப்பில் 4 தலைமுறைகளாக 200 ஆண்டுகள் கடந்தும் ஒரு குடும்பத்தினர் சிறந்து விளங்கி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன் என களிமண் பொம்மைகள் தயாரிப்பில் 4 தலைமுறைகளை கடந்து 200 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தினர் சிறந்து விளங்கி வருகின்றனர்.
கலைக்காக வாழும் குடும்பம்
கலைகளுக்காக ஒரு குடும்பம் நான்கு தலைமுறைகளாக 200 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் வாழ்ந்து வருகின்றது என்று சொன்னால் அது சற்று ஆச்சரியமாக தான் இருக்கும். அப்படிப்பட்ட கலை குடும்பம்தான் மயிலாடுதுறை அருகே வாழ்ந்து வருகின்றனர். இந்த குடும்பத்தினர் நான்கு கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, அப்பாவை தொடர்ந்து தற்போது நான்காம் தலைமுறை மகன் என அனைவருமே களிமண் பொம்மைகள் செய்யும் கலைஞர்களாக இருந்து வருகின்றனர்.
முருகேசன் கலைக்கூடம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மூங்கில் தோட்டம் அருகில் இயங்கி வருகிறது முருகேசன் என்ற பெயரிலான கலைக்கூடம். இந்த கலைக்கூடத்தை ஆனந்தகுமார் என்பவர் தற்போது நான்காம் தலைமுறையாக நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான வகைகளில் விதவிதமான கைவினை பொம்மைகள் செய்யப்பட்டு நாடுகள் கடந்தும் விற்பனை செய்யப்படுகிறது.
நவராத்திரி கொலு பொம்மைகள்
அதுவும் தற்போது பொம்மைகளுக்கு முக்கியத்துவம் ஆன நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நவராத்திரி கொலுவிற்கான விதவிதமான பொம்மைகள் இங்கு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இங்கு இயற்கையோடு இணைந்து களிமண் கொண்டு செய்யப்படும் பொம்மைகள் மட்டுமே என்பது தனி சிறப்பு. நவராத்திரி மட்டும் அல்ல வீடுகளில் அழகு சேர்க்கும் விதமாக வைக்கப்படும் பொம்மைகளுக்கும், திருவள்ளுவர், காந்தி, பாரதியார் போன்ற தலைவர்களின் பொம்மைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.
அப்போதே வடிவமைக்கப்பட்ட அச்சுகள்
ஆனந்த குமாரின் முன்னோர்கள் இன்றைய காலகட்டத்தில் வாழ்கை முறை, உடைகள் என அனைத்தையும் அப்போதே கற்பனை செய்து அதற்கான பொம்மைகள் உருவங்களை தாயார் செய்வதற்கான அச்சு மோல்டுகளை உருவாக்கி வைத்துள்ளனர். இதனை கேட்கும் போது நாம் தமிழர்கள் பல துறைகளில் தீர்க்கதரிசி போன்று இருந்துள்ளதை உணர முடிகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கலைநயம் மிக்கவர்கள் என்பதை கோயில் கோபுரங்களை பார்ததே நாம் அறிந்துகொள்ள முடியும். அதனால் தான் தமிழகத்தில் உள்ள கோயில்கள், சிறப்பங்கலைகளை அறிந்துகொள்வதற்காக வெளிநாட்டினர் சுற்றுலாவாக வந்து பார்தது சென்று நமது கலைகளை அவர்கள் கற்றுகொண்டு செல்கின்றனர்.
நவீன தொழில்நுட்பத்துடன் போட்டி
இதுகுறித்து ஆனந்தகுமார் கூறுகையில், தற்போதைய காலகட்டத்தில் இயந்திரமயமாக்கலால், 3டி டிஜிட்டல் என்று கம்ப்யூட்டர் வடிவமைப்பில் பல்வேறு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நூற்றாண்டுகளுக்கு முன்போ தற்போதைய கலியுகத்தில் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள், எப்படி நடந்து கொள்வார்கள், வருங்காலங்களில் கலாச்சாரம், தொழில்களின் வரைமுறைகள், மனிதனின் ஆடைகள், கலாச்சார மாற்றம் ஆகியவற்றை வடிவமைப்புகள் குறித்து அறிந்து மோல்டு தயார் செய்தும், திருமண வைபவங்களில் பொம்மைகள் கொண்டு அலங்காரம் செய்யும் நுணுக்கங்கள் ஆகியவற்றிற்கான மோல்டுகளை தனது முதாதையர்கள் தயார் செய்துவைத்துள்ளனர். அதனை கொண்டு தற்போது பொம்மைகள் உருவாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறேன்.
இலவசமாக கற்றுத்தர தயார்
அழிந்துவரும் பொம்மை தயாரிக்கும் கலையை இன்றைய தலைமுறையினருக்கு கற்றுகொடுக்க வேண்டுமென்றும், அந்த கலை பாதுகாக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் கலைகளை இலவசமாக கற்றுகொடுக்க வேண்டுமென்ற ஆர்வமும் எனக்கு உள்ளது. கலையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் தானாக வந்து சிலர் கற்றுகொள்கின்றனர். எவ்வித கட்டணமும் இன்றி கற்றுகொடுத்து கொண்டிருக்கிறேன். எங்களிடம் இருக்கும் மோல்டுகளை கொண்டு பலர் தங்கள் வீடுகளில் இருந்து பொம்மைகளை தயாரித்து எங்களுக்கு கொடுக்கின்றனர். அரசு ஊக்குவித்தால் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாதம் ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால் இந்த கலையை பாதுகாத்து இந்தக் கலையை இன்றைய இளைய தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுக்க தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.