12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவியை கடித்து குதறிய வெறிநாய் - சீர்காழி அருகே பயங்கரம்
சீர்காழி அருகே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவியை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அல்லிவிளாகம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை தெருநாய் கடத்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பாக எழுதி மேற்படிப்பிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மாணவிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெறிநாய் இடம் சிக்கிய மாணவி
அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த 12 -ம் வகுப்பு மாணவி வழக்கம்போல் காலை பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது தெருவில் நடந்து போகும்போது எதிர்பாராத விதமாக தெருநாய் ஒன்று மாணவியை நோக்கி பாய்ந்து அவரை கொடூரமாக கடித்து குதறியுள்ளது. இதனால் மாணவியின் கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்து. மேலும் மாணவி அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து நாயை அடித்து விரட்டி மாணவியை காப்பாற்றியுள்ளனர்.
மாணவிக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் சிகிச்சை
வெறிநாய் கடித்ததில் மாணவியின் கை, கால் உள்ளிட்ட இடங்களில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக, அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்து வருகிறார்கள். வெறிநாய் கடித்ததால் தடுப்பூசிகள், அடுத்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது தேர்வு எழுத முடியுமா? மாணவியின் கவலை
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் எழுதவேண்டிய நிலையில், தற்போது நாய்க்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மாணவியின் எதிர்காலத்தை கேள்விக்குறியகாக மாற்றியுள்ளது. காயங்களின் தன்மை, அவரது உடல் நிலை ஆகியவை கருத்தில் கொண்டு, அவர் தொடர்ந்து தேர்வுக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலை மாணவியையும், அவரது பெற்றோர்களையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது முதல் முறையல்ல! மக்கள் குற்றச்சாட்டு
இந்த வெறிநாய் தாக்குதல் முதல் முறை நடைபெற்ற நிகழ்வு அல்ல. அல்லிவிளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகமாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திரிந்து வருகிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் கிடைத்துள்ளதாகவும், பொதுமக்கள் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து, பொதுமக்கள் அச்சத்துடன் இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என வேதனை தெரிவித்தனர்.
தொடரும் நிலை – நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
அல்லிவிளாகம் கிராம மக்கள் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இன்னும் தீர்வாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, அந்த பகுதியில் 50-க்கும் அதிகமான நாய்கள் சுற்றித் திரிகின்றன என்பதால், இதுபோன்ற வெறிநாய் தாக்குதல்கள் தொடர்ந்தே நடக்கும் அபாயம் உள்ளது. நாய்களை பிடித்து கட்டுப்படுத்தவும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த அதிகாரிகளும் இதற்காக முன்வரவில்லை என்பதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

