மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
சீர்காழி அருகே தடை செய்யப்பட்ட 30 லட்சம் மதிப்பிலான 1000 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து, நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சீர்காழி அருகே தடை செய்யப்பட்ட 30 லட்சம் மதிப்பிலான 1000 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
புழக்கத்தில் தடைப்பட்ட செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவைகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பெயரில், போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இது தொடர்பான சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தந்தைக்காக மகன் செய்த செயல் - மயிலாடுதுறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
கடையில் இருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் அடுத்த கற்கோயிலில் முத்துராஜ் என்பவரின் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்று வைத்தீஸ்வரன்கோயில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகை பொருட்கள் 7 கிலோ இருப்பது தெரியவந்தது.
அதனை அடுத்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வைத்தீஸ்வரன் கோயில் வேலவன் நகரை சேர்ந்த ரமேஷ் என்பவது குடோனில் இருந்து தடைப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது விசாரணையில் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து, ரமேஷ் குடோனில் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி லாமேக் தலைமையில் வைத்தீஸ்வரன்கோயில் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, காவல் உதவி ஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட காவல்துறையினர் சோதனையிட்டனர்.
ஆயிரம் கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் குடோன் அருகில் நின்று கொண்டிருந்த மீன் ஏற்றிச்செல்லும் மினி லாரிமை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மீன் ஏற்றும் பெட்டிகளை வைத்து மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், உள்ளிட்ட சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் ஆயிரம் கிலோ இருப்பது தெரியவந்தது. உடனடியாக புகையிலை பொருட்களை வாகனத்துடன் கைப்பற்றி, வாகன ஓட்டுநர்கள் நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மற்றும் கீழ்வேளுரை சேர்ந்த சரவணன், வைத்தீஸ்வரன் கோயிலை சேர்ந்த கடை உரிமையாளர் முத்துராஜ், குடோன் உரிமையாளர் ரமேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து விற்பனைக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
இந்நிலையில் தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உடனடியாக மாவட்ட முகாம் அலுவலகத்தில் இருந்து நேரடியாக வைத்தீஸ்வரன் கோயில் காவல்நிலையத்திற்கு வந்து, பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை குறித்து காவல்துறையுடன் கேட்டறிந்து, பறிமுதல் செய்த காவல்துறையினரை பணியை பாராட்டினார்.