Jana Nayagan Censor: ஜனநாயகன் பொங்கல் இல்லை! நீதிபதி உத்தரவை எதிர்த்து உடனே சென்சார்போர்டு மேல் முறையீடு!
Jana Nayagan Censor Certificate: மேல் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதித்த நிலையில், ’’திங்கள் அன்று மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும்’’ என்று தணிக்கை வாரியம் கோரிக்கை விடுத்தது.

விஜயின் ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக யுஏ தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா அதிரடி உத்தரவு பிறப்பித்த சில நிமிடங்களிலேயே, தணிக்கை வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளது.
தனி நீதிபதி உத்தரவிட்ட சிறிது நேரத்திலேயே, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் மேல்முறையீட்டிற்காக தலைமை நீதிபதி அமர்வு முன்பு அவசர கோரிக்கை வைத்தார். மேல் முறையீடு செய்ய தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்சவா அனுமதி அளித்தார். இந்த நிலையில், ’’திங்கள் கிழமை அன்று மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும்’’ என்று தணிக்கை வாரியம் கோரிக்கை விடுத்தது.
என்ன அவசரம்?- தலைமை நீதிபதி கேள்வி
எனினும் இதுகுறித்து தலைமை நீதிபதி அமர்வு, ’’என்ன அவசரம்?, நீங்கள் முதலில் மனுத் தாக்கல் செய்யுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று பதிலளித்துள்ளது.
எனினும் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்று (ஜனவரி 9) பிற்பகல் அல்லது திங்கள் கிழமை அன்று விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கலுக்கு வெளியாகுமா?
மத்தியத் தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்துள்ளதால், அதைக் காரணம் காட்டி யு/ ஏ சான்றிதழை உடனே வழங்காது என்றே தெரிகிறது. இதனால் இன்னும் சில நாட்களுக்கு, அதாவது பொங்கல் விடுமுறைக்கு ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.






















