வானகிரி மீனவர்கள்: இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு! கர்ப்பிணி மனைவியின் கண்ணீர் கோரிக்கை, அரசு நடவடிக்கை என்ன?
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தன் கணவரை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என கர்ப்பிணி மனைவி கண்ணீருடன் மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைத்த நிகழ்வு நிகழ்வு அனைவரையும் கலங்க செய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் உட்பட மொத்தம் 14 தமிழக மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு படகில் ஏற்பட்ட பழுது காரணமாகக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூபாய் 1 கோடி மதிப்பிலான விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரின் கர்ப்பிணி மனைவி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்த சம்பவம் பார்த்தவர்களை கலங்க வைத்துள்ளது.
வாழ்வாதார தேடி சென்ற மீனவர்கள்
வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு ஒன்று கடந்த நவம்பர் 3-ஆம் தேதி தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காகப் புறப்பட்டது. இந்தப் படகில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த ராபின், ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத், அகிலன், ஆகாஷ், ராஜ்குமார் ஆகிய 12 மீனவர்களும், தரங்கம்பாடியைச் சேர்ந்த கோவிந்த் மற்றும் கடலூரைச் சேர்ந்த பாரதி என மொத்தம் 14 மீனவர்கள் சென்றுள்ளனர்.
பழுதடைந்த படகு
ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக விசைப்படகில் திடீரெனப் பழுது ஏற்பட்டது. உடனடியாகப் படகைச் சீரமைக்கும் நோக்கில், மீனவர்கள் படகை அருகே உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்திற்கு கொண்டு சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த பின்னர், மீண்டும் அங்கிருந்து தரங்கம்பாடி திரும்புவதற்கு மீன்வளத் துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை அன்று ஜெகதாம்பட்டினத்தில் இருந்து தரங்கம்பாடி நோக்கி அந்த விசைப்படகு புறப்பட்டுள்ளது.
நடுக்கடலில் வந்து கொண்டிருந்த போது, மீண்டும் படகில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் படகை இயக்க முடியாமல் மீனவர்கள் தவித்துள்ளனர். படகின் என்ஜின் பழுதால் படகு காற்றின் போக்கில் மெல்ல மெல்ல இலங்கை கடற்பரப்பை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு பழுதடைந்து, எந்தவிதமான தொலைத்தொடர்புக் கருவிகளும் வேலை செய்யாததால், கடலில் தத்தளித்த மீனவர்களால் தங்களது நிலை குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியவில்லை.
இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை
படகு பழுது காரணமாகத் திசைமாறி, இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்றதாகக் கூறி, அந்த 14 தமிழக மீனவர்களையும், சுமார் ரூபாய் 1 கோடி மதிப்பிலான விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தகவல் வானகிரி மீனவக் கிராமத்தை அடைந்ததும், ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மேலே மீனவர்களின் குடும்பங்கள் கண்ணீருடன் கலங்கி தவித்து வருகின்றனர்.
கர்ப்பிணிப் பெண் கண்ணீர் மல்கக் கோரிக்கை
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் வானகிரி மீனவ கிராமத்திற்கு நேரில் சென்று, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரின் மனைவி, தான் கர்ப்பிணியாக இருப்பதாகவும், தன் கணவரை உடனடியாக மீட்டுத் தருமாறும் சட்டமன்ற உறுப்பினரிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த அனைவரின் மனதையும் உலுக்கியது.
சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், "படகு பழுது காரணமாகத் திசைமாறிச் சென்ற இந்த அப்பாவி மீனவர்களையும், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அவர்களின் வாழ்வாதாரமான விசைப்படகையும் மீட்டுத் தருவதற்காக, தமிழக அரசு மூலம் உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதியளித்தார். மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவில் மீட்டுத் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வானகிரி கிராம மக்கள் ஒட்டுமொத்தமாகக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















