திருக்கடையூரில் காணும் பொங்கல் ரேக்ளா பந்தயம்: அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் - விழாக்குழு அமைப்பு
திருக்கடையூரில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் பாரம்பரிய மாடு மற்றும் குதிரை ரேக்ளா பந்தயங்கள் இந்தாண்டு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் நடைபெற்றது.

திருக்கடையூர்: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூரில், ஆண்டுதோறும் காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாரம்பரியமிக்க மாடு மற்றும் குதிரை ரேக்ளா பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பந்தயத்தை மிகச் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவது குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருக்கடையூர் ரேக்ளா ரேஸ்ஸுன் பாரம்பரியப் பின்னணி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் போட்டியில் கலந்து கொள்வார். திருக்கடையூரில் தில்லையாடி உத்திராபதியார் மற்றும் நாராயணசாமி ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் இந்த ரேக்ளா பந்தயம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. காணும் பொங்கல் அன்று காலை தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெறும் இந்தப் போட்டிகள், வீரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் பெயர்பெற்றவை. இப்போட்டிகள் மாடு மற்றும் குதிரை என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றின் வேகம் மற்றும் திறனை அடிப்படையாகக் கொண்டு ஆறு வகைகளாக நடத்தப்படுகின்றன:
* சின்ன மாடு மற்றும் பெரிய மாடு பிரிவுகள்.
* நடு மாடு பிரிவு.
*கரிச்சான் குதிரை மற்றும் நடுக்குதிரை பிரிவுகள்.
* பெரிய குதிரை பிரிவு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.
ஆலோசனைக் கூட்டத்தின் சிறப்பம்சங்கள்
இந்த ஆண்டு போட்டிகளை ஒருங்கிணைப்பது குறித்து நடைபெற்ற கூட்டத்தில், திருக்கடையூரைச் சுற்றியுள்ள 8 ஊராட்சிகளைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், ரேக்ளா பந்தய நிர்வாகிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் பின்வருமாறு
* ஒருங்கிணைந்த செயல்பாடு: திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர்கள் இணைந்து இந்தப் பந்தயத்தைச் சிறப்பாக முன்னின்று நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
* பாதுகாப்பு ஏற்பாடுகள்: பந்தயத்தில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் குதிரைகளின் பாதுகாப்பு, அவற்றின் உரிமையாளர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் போட்டியைப் காணவரும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
* விழாக்குழு அமைப்பு: போட்டிகளை எவ்விதப் புகாருமின்றி நேர்மையாகவும், உற்சாகமாகவும் நடத்துவதற்குத் தகுந்த நபர்களைக் கொண்டு புதிய விழாக்குழு அமைக்கப்பட்டது.
* எல்கை பந்தய நிர்ணயம்: இந்த ஆண்டு பந்தயத்திற்கான எல்கையை (பந்தய தூரம்) நிர்ணயம் செய்வது மற்றும் விதிகளுக்கு உட்பட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்து நிர்வாகிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாடு மற்றும் குதிரை உரிமையாளர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாரம்பரிய விளையாட்டின் மூலம் கிராமியக் கலைகளையும், கால்நடைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட இக்கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில், காணும் பொங்கல் அன்று திருக்கடையூர் விழாக்கோலம் பூணும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் துரிதப்படுத்த முடிவு செய்யப்பட்டது.






















