மக்களின் எதிர்ப்புகளுக்கு நடுவில் சீகன்பால்க்-விற்கு மணிமண்டபம்.. தரங்கம்பாடியில் பரபரப்பு...
தரங்கம்பாடியில் ரூ.7 கோடியில் அமைய உள்ள சீகன்பால்கு நினைவு அரங்கத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை: தமிழகத்தில் அச்சுக்கலையின் புரட்சியை ஏற்படுத்தியவரும், விவிலியத்தைத் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்த்து அச்சிட்டவருமான சீகன்பால்க்வின் நினைவைப் போற்றும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட நினைவு அரங்கம் அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, தரங்கம்பாடி வட்டம் எருக்கட்டாஞ்சேரி கிராமத்தில் நடைபெற்றது.
அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடைபெறும் இந்தப் பணிகளுக்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அரசுத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
யார் இந்த சீகன்பால்க்? - ஒரு வரலாற்றுப் பார்வை
ஜெர்மனி நாட்டின் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்நிட்ஸ் என்ற ஊரில் 1682-ஆம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி பிறந்தவர் சீகன்பால்க். சமயப் பணிக்காகத் தனது 23-வது வயதில் ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட அவர், சுமார் 222 நாட்கள் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு 1706-ஆம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி தரங்கம்பாடியை வந்தடைந்தார்.
தமிழ்நாட்டிற்கு வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டார். தமிழைக் கற்றுக்கொண்டதுடன் நில்லாமல், தமிழ் எழுத்துக்களை அச்சுக்கு ஏற்றவாறு வடிவமைப்பதில் ஆர்வம் காட்டினார்.
அச்சுக்கலை புரட்சியும் விவிலியமும்
தமிழ் அச்சு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தரங்கம்பாடியில் 1712-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி முதல் அச்சுக்கூடத்தை நிறுவினார். அதுவரை ஓலைச்சுவடிகளில் மட்டுமே முடங்கிக்கிடந்த தமிழ் மொழியை, காகித வடிவில் அச்சுக்குக் கொண்டு வந்த பெருமை இவருக்கு உண்டு.
* 1713-இல் பைபிளின் 'புதிய ஏற்பாடு' பகுதியினை அச்சுக்கோர்க்கும் பணிகளைத் தொடங்கினார்.
* 1715-இல் முழுமையான புதிய ஏற்பாடு நூலைத் தமிழில் வெளியிட்டு சாதனை படைத்தார்.
* அச்சுக்கலையோடு நில்லாமல், தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி மற்றும் செந்தமிழ் அகராதி போன்ற பல அரிய நூல்களையும் அச்சேற்றினார்.
சமூகச் சீர்திருத்தப் பணிகள்
அக்காலத்திலேயே பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த சீகன்பால்க், கணவரை இழந்த பெண்களை ஆசிரியர்களாகக் கொண்டு பெண்களுக்கான முதல் கல்வி நிலையத்தை உருவாக்கினார். பள்ளி விடுதிகள் மற்றும் தையல் பயிற்சி நிலையங்கள் மூலம் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.
ரூ.7 கோடியில் நவீன வசதிகளுடன் அரங்கம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த அரங்கம் கட்டப்படுகிறது.
சுமார் 9,490 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட கட்டடத்தில்:
* திருவுருவச் சிலை: சீகன்பால்க் சிறப்பான வெண்கலத் திருவுருவச் சிலை நிறுவப்படும்.
* திருமண மண்டபம்: 350 பேர் அமரக்கூடிய விசாலமான ஹால்.
* வசதிகள்: நவீன சமையலறை, உணவருந்தும் அறை, தங்கும் அறைகள் மற்றும் கழிவறை வசதிகள்.
கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள்
இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பிரான், டிஇஎல்சி (TELC) பேராயர் டாக்டர் கிறிஸ்டியான் சாம்ராஜ், சபைக் குருக்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், தமிழறிஞர் சீகன் பால்க்விற்கு அமையவுள்ள மணிமண்டபத்தை பொறையார் பகுதிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும், அவர் வாழ்ந்த தரங்கம்பாடியிலேயே அதனை அமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலே வணிகர்கள் கடைகளை அடைத்தும், மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, அனைத்து தரப்பு மக்களும் இணைந்து உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மக்களின் கோரிக்கை
"சீகன் பால்க் வாழ்ந்து, மறைந்து, தமிழ்த் தொண்டாற்றிய இடம் தரங்கம்பாடிதான்; எனவே மணிமண்டபம் இங்குதான் அமைய வேண்டும்" என்பது பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
மக்களின் கோரிக்கை
"பொறையார் பகுதியில் அமையவுள்ள மணிமண்டபத்தை உடனடியாகத் தரங்கம்பாடி பகுதிக்கு மாற்ற வேண்டும். வரலாற்றுச் சிறப்புமிக்கச் சீகன் பால்க்வின் புகழைச் சரியான இடத்தில் நிலைநாட்ட வேண்டும்" என ஒருமித்த குரலாக தெரிவித்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களின் போராட்டங்கள் தொடரும் என தரங்கம்பாடி மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு மற்றும் கோரிக்கைகளையும் மீறி இன்று அமைச்சர் மணிமண்டபத்திற்கான அடிக்கலை நாட்டியுள்ளது குறிப்பிட்ட தக்கது.






















