குன்னம் கிராமத்தையே நடுங்க வைத்த 'அந்த' 7 அடி உருவம்... இப்போது எங்கே?
மயிலாடுதுறை மாவட்டம் குன்னம் கிராமத்தில் ஓராண்டு காலமாக ஆடு, கோழிகளை வேட்டையாடி வந்த 7 அடி நீள ராட்சத முதலை ஒருவழியாக பிடிபட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் கடந்த ஓராண்டு காலமாகப் பதுங்கியிருந்து, கால்நடைகளை வேட்டையாடி வந்த ராட்சத முதலை ஒருவழியாக வனத்துறையினரின் பிடியில் சிக்கியது. 26-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய இந்த 'எமன்' பிடிபட்டதால், ஓராண்டு கால மரண பயத்திலிருந்து கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
குளத்தில் ஒளிந்திருந்த ஆபத்து
குன்னம் கிராமத்தின் மையப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அய்யனார் குளம், அந்த ஊரின் உயிர்நாடியாகும். நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாப்பதில் தொடங்கி, பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்கும் இந்தக் குளத்தையே முழுமையாக நம்பியுள்ளனர்.
ஆனால், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, வழிதவறி இந்தக் குளத்திற்குள் நுழைந்த ஒரு விருந்தாளி, காலப்போக்கில் அந்த ஊர் மக்களுக்கே எமனாக மாறுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் நீரில் சிறு சலசலப்பாகத் தெரிந்த அந்த உருவம், நாளடைவில் ஊர் மக்களை வீட்டுக்குள் முடக்கி வைக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்தது.
26 உயிர்கள் பலி
தொடக்கத்தில் இந்த முதலையின் நடமாட்டம் யாருடைய கண்களுக்கும் புலப்படவில்லை. ஆனால், குளத்தின் கரையோரம் மேயச் செல்லும் ஆடுகளும், கோழிகளும் மர்மமான முறையில் காணாமல் போகத் தொடங்கின. "ஏதோ திருட்டுப் போகிறது" என்று நினைத்த கிராம மக்கள், ஒருநாள் கரையோரம் ஆடு ஒன்றை முதலை கவ்விக்கொண்டு நீருக்குள் இழுத்துச் சென்றதைக் கண்டு அதிர்ந்து போன
விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கையில், இதுவரை 6 ஆடுகள் 20 நாட்டுக்கோழிகளை முதலை பிடித்து சாப்பிட்டுள்ளது. தங்கள் அன்றாடப் பிழைப்புக்காக வளர்க்கும் கால்நடைகளை ஒவ்வொன்றாகப் பலி கொடுத்துவிட்டு, கிராம மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றோம் என்றனர்.
முதலையின் ‘ரூட் மேப்’
இந்த முதலையின் நடமாட்டம் மிகவும் திட்டமிட்டபடி இருந்ததாகக் கிராமத்தினர் வியப்புடன் கூறுகின்றனர். பகல் நேரங்களில் அய்யனார் குளத்தின் கரையிலேயே வெயில் காய்ந்தபடி சாவகாசமாகப் படுத்திருக்கும் இந்த முதலை, இரவு நேரமானால் சாலை ஓரம் இருக்கும் 'நெட்டகுளம்' என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து விடுகிறது.
மீண்டும் அதிகாலைப் பொழுது புலரும்போது, அங்கிருந்து அய்யனார் குளத்திற்கே திரும்பி விடுகிறது. இந்த அதிகாலை நேரத்தில் தான், தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகளைக் குறிவைத்துத் தனது வேட்டையைத் தொடங்குகிறது. அதன் வேகம் மற்றும் உருவத்தைக் கண்டாலே மக்கள் உயிருக்குப் பயந்து சிதறி ஓடும் நிலை நீடித்து வந்தது.
வனத்துறையுடன் ‘கண்ணாமூச்சி’ ஆட்டம்
ஏற்கனவே மக்கள் புகாரளித்ததன் பேரில், கடந்த மாதம் சீர்காழி வனத்துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் முகாமிட்டனர். ஆனால், அதிகாரிகளின் வருகையை மோப்பம் பிடித்தது போல, அந்தச் சில நாட்கள் மட்டும் முதலை நீருக்கு அடியிலேயே பதுங்கிக் கொண்டது. எவ்வளவு தேடியும் முதலை சிக்காததால், கண்காணிப்புப் பணிகள் தற்காலிகமாகத் தொய்வடைந்தன. வனத்துறையினர் சென்ற சில நாட்களிலேயே மீண்டும் தனது ஆட்டத்தை அந்த முதலை தொடங்கியுள்ளது கிராம மக்களை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நிம்மதி இழந்த கிராமம்
முதலையின் அச்சுறுத்தலால் குன்னம் கிராம மக்கள் குளத்திற்குச் செல்லவே தடை விதிக்கப்பட்டிருந்தது. "எங்கள் கண் முன்னே எங்கள் ஆடுகள் செத்து விழுகின்றன. அடுத்து இது எப்போது மனிதர்களை, குறிப்பாகக் குழந்தைகளைத் தாக்குமோ என்ற பயத்தில் தூக்கம் தொலைத்து நிற்கிறோம்," என கிராமத்தினர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை அய்யனார் குளத்தின் கரையில் அந்த ராட்சத முதலை எந்தவிதப் பயமுமின்றி வெயிலில் படுத்திருந்ததை மக்கள் பார்த்தனர். உடனடியாக சீர்காழி வனத்துறைக்குத் தகவல் பறந்தது.
அதிரடி மீட்பு நடவடிக்கை
சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குளத்தைச் சுற்றிலும் வலைகள் விரிக்கப்பட்டு, முதலையை ஈர்ப்பதற்காகப் பிரத்யேகக் கூண்டுகள் வைக்கப்பட்டன. சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, 7 அடி நீளமும் 50 கிலோ எடையும் கொண்ட அந்த ராட்சத முதலை வனத்துறையினரின் பிடியில் சிக்கியது.
பாதுகாப்பான இடமாற்றம்
பிடிபட்ட முதலை காயங்கள் ஏதுமின்றி லாவகமாகக் கட்டப்பட்டு, பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் அந்த முதலை, அணைக்கரை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விடப்பட்டது.
"இந்த முதலை ஓராண்டு காலமாகப் பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. தற்போது இதனைப் பிடித்து ஆற்றில் விட்டதன் மூலம் குன்னம் கிராம மக்களின் நீண்ட நாள் பயம் நீங்கியுள்ளது," என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனத்துறையினரின் இந்தத் துரித நடவடிக்கையைப் பாராட்டியுள்ள குன்னம் கிராம மக்கள், ஓராண்டுக்குப் பிறகு இன்று அச்சமின்றித் தங்கள் அன்றாடப் பணிகளுக்காகக் குளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், நீர்நிலைகளின் ஓரம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















