மயிலாடுதுறை கிராம சபை: கருப்பு, சிகப்பு புடவை பரிசு, அரசு பேருந்தில் மாநாடு - மக்கள் கொந்தளிப்பு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற கிராம் சபை கூட்டங்களில், மக்கள் குறைகளை கேட்காமல் ஆளுங்கட்சியின் மாநாட்டிற்கான விளம்பர மேடையாக மாறியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மயிலாடுதுறை: நாட்டின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
மக்களாட்சியின் அடிப்படை அங்கமாக கருதப்படும் இந்த கிராம சபை கூட்டங்களில், ஊர் வளர்ச்சி, நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் குறைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம். ஆனால், இன்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்கள், மக்கள் குறைகளை கேட்கும் தளமாக அமையாமல், ஆளுங்கட்சியின் மாநாட்டிற்கான விளம்பர மேடையாக மாறியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
ஊராட்சிப் பணியாளர்கள் மூலம் புடவை விநியோகம்
மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த மகளிருக்கு திமுக சார்பில் சிறப்பு "பரிசுகள்" வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திமுகவின் சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்ட, கருப்பு மற்றும் சிவப்பு வண்ணத்திலான புடவைகள் விநியோகம் செய்யப்பட்டன.
அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், இந்த புடவைகளை விநியோகம் செய்யும் பணியில், கிராம ஊராட்சியின் தற்காலிக அரசு பணியாளர்களான மக்கள் நலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசுப் பணியில் இருப்பவர்களை ஒரு அரசியல் கட்சியின் சின்னம் பொறித்த பொருட்களை விநியோகிக்கப் பயன்படுத்தியது சட்ட விதிமீறல் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெரும்பாலான ஊராட்சிகளில், பெண்கள் இந்தப் புடவைகளை அணிந்தபடியே கிராம சபை கூட்டத்தில் அமர்ந்திருந்த காட்சியானது, ஒரு அரசு விழாவைப் போலன்றி கட்சிப் பொதுக்கூட்டம் போலவே காட்சியளித்தது.
அவசர கதியில் முடிந்த கூட்டங்கள்
தஞ்சாவூரில் இன்று திமுக சார்பில் பிரம்மாண்டமான மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பெண்களை அழைத்துச் செல்ல திமுக திட்டமிட்டிருந்தது. இதன் விளைவாக, முறையாக மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய கிராம சபை கூட்டங்கள், கண்துடைப்பிற்காக மிகக் குறுகிய காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டன.
குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் உள்ளூர் கோரிக்கைகள் குறித்துப் பேச வந்த பொதுமக்கள், கூட்டங்கள் மின்னல் வேகத்தில் முடிக்கப்பட்டதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர். கூட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்டு, கட்சி மாநாட்டிற்கு ஆள் சேர்ப்பதிலேயே உள்ளூர் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டியதாகத் குற்றச்சாட்டுகள் எழுத்துள்ளது.
அரசுப் பேருந்துகளில் கட்சி கொடிகள்
கிராம சபை கூட்டம் முடிந்த கையோடு, அங்கிருந்த பெண்கள் அனைவரும் தஞ்சை மாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்காகத் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளின் முன்புறம் திமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
அரசுக்குச் சொந்தமான வாகனங்களில் கட்சி கொடிகளைக் கட்டி, அரசியல் மாநாட்டிற்குப் பெண்களை அழைத்துச் சென்றது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பல கிராமங்களில் வழக்கமான பொதுமக்கள் பங்கேற்பு மிகக் குறைவாகவே இருந்தது. மாநாட்டிற்காகப் பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டதால், கிராம சபை கூட்டங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும் ஏராளமான அரசு பேருந்துகள் மாநாட்டிற்கு சென்ற நிலையில் வழக்கமான வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் குறைக்கப்பட்டதாகவும், இதனால் போதிய பேருந்து வசதி இன்றி பொதுமக்கள் அவதியடைந்ததாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
சமூக ஆர்வலர்களின் கண்டனம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:
"குடியரசு தினத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டம் என்பது புனிதமானது. மக்களின் அடிப்படை உரிமைகளை விவாதிக்கும் இந்த தளத்தில், ஆளுங்கட்சி தனது அரசியல் பலத்தைக் காட்டுவது ஜனநாயகப் படுகொலை. அரசுப் பணியாளர்களையும், அரசுப் பேருந்துகளையும் கட்சி மாநாட்டிற்குப் பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம். மாவட்ட நிர்வாகம் இதனைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்," எனத் தெரிவித்தனர்.
அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆளுங்கட்சியின் இந்தச் செயல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















