அய்யோ இவ்வளவு மனுவா..? மயிலாடுதுறை மாவட்டத்தில் அடிப்படை வசதிக்குக் கூட ஆட்சியரைத் தேடும் அவலம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 497 மனுக்கள் குவிந்துள்ளன.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (நவம்பர் 23) நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் காலை முதலே ஆட்சியரக வளாகத்தில் திரண்டிருந்தனர்.
இன்றைய கூட்டத்தில் மட்டும் மொத்தம் 497 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்களின் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாகத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வது, மாவட்ட நிர்வாகத்தின் அடிமட்டச் செயல்பாடுகளில் உள்ள தேக்கநிலையையும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகப் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் மனுக்களும் நிர்வாகத்தின் தேக்கநிலையும்
பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகளை உள்ளூர் அளவிலேயே வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே அரசின் அடிப்படை நோக்கமாகும். ஆனால், கீழ்மட்ட அலுவலர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் அலைக்கழிப்பதாலேயே, சாதாரண அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மக்கள் மாவட்ட ஆட்சியரைத் தேடி வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், மகளிர் உரிமைத்தொகை வேண்டி மட்டும் அதிகபட்சமாக 136 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள பலருக்கும் இத்தொகை சென்று சேராததும், விண்ணப்பங்களின் நிலை குறித்துத் தெளிவான விளக்கம் அளிக்கப்படாததுமே இந்த எண்ணிக்கை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், அடிப்படை வசதிகள் கோரி 57 மனுக்களும், இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 51 மனுக்களும் குவிந்துள்ளன. குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கூட உள்ளாட்சி நிர்வாகங்கள் நிறைவேற்றத் தவறியுள்ளதை இம்மனுக்கள் உறுதிப்படுத்துகின்றன.
மேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 41 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கிக்கடன் மற்றும் உபகரணங்கள் கோரி 29 மனுக்களும் பெறப்பட்டுள்ளன.
நலிவடைந்த பிரிவினர் தங்களது வாழ்வாதார உதவிக்காக ஆட்சியர் அலுவலகப் படியேறும் அவலநிலை தொடர்வது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நில அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்புப் புகார்கள்
மாவட்டத்தில் நிலம் தொடர்பான பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இன்றைய மனுக்களின் எண்ணிக்கை உணர்த்துகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 39 மனுக்களும், நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பாக 39 மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆரம்பக் கட்டத்திலேயே உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதால், சாமானிய மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், அது தொடர்பான புகார்கள் கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கையாகிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தவிர, வேலைவாய்ப்பு கோரி 36 மனுக்களும், பல்வேறு துறைகள் சார்ந்த புகார்கள் தொடர்பாக 69 மனுக்களும் என மொத்தம் 497 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.
ஆட்சியரின் உத்தரவும் மக்களின் எதிர்பார்ப்பும்
பெறப்பட்ட மனுக்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், அவற்றின் மீது எவ்வித காலதாமதமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்குத் தவறாமல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இருப்பினும், அதிகாரிகள் மனுக்களைப் பெற்றுக்கொண்டு வெறும் ஒப்புகைச் சீட்டு வழங்குவதோடு தங்களது கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகின்றனர் என்றும், பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்காததால் மீண்டும் மீண்டும் அதே கோரிக்கையுடன் ஆட்சியரகத்திற்கு வர வேண்டியுள்ளது என்றும் பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.
நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்
முன்னதாக, இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் நேற்று (நவம்பர் 22) நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுக் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா 7,280 ரூபாய் வீதம் மொத்தம் 14,560 ரூபாய் மதிப்பிலான விலையில்லா பித்தளை தேய்ப்புப் பெட்டிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) பிரபா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
வாராந்திரக் கூட்டங்களில் மனுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க, வட்ட அளவிலான அதிகாரிகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்பதே மயிலாடுதுறை மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























