பூமிக்கடியில் வெடிக்கும் ஜெட் கருவி? அதிர்ச்சியில் டெல்டா!
குத்தாலத்தில் ONGC எண்ணெய் கிணறு பணிகளால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை தமிழக அரசு காக்க வேண்டும் எனவும் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில், ஹைட்ரோகார்பன் மற்றும் எண்ணெய் எரிவாயு கிணறுகளின் பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் அப்பகுதி பொதுமக்களுடனான முக்கிய கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் குடிநீர் மாசுபாடு மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாகப் பேசினார். அப்போது, காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படும் வகையில் தற்போது எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பராமரிப்புப் பணி என்ற பெயரில் நீடிக்கும் அத்துமீறல்கள்
குத்தாலம் தேரடி பைரவா நகர் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான ஓஎன்ஜிசி நிறுவனத்தால் ஏற்கனவே கைவிடப்பட்ட பழைய எண்ணெய் கிணற்றில், கடந்த மூன்று நாட்களாக மீண்டும் பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பேராசிரியர் ஜெயராமன் சுட்டிக்காட்டினார். பொதுவாக ஒரு எண்ணெய் கிணற்றின் பராமரிப்புப் பணி என்பது அதிகபட்சமாக ஏழு நாட்களில் முடிவடையக் கூடிய ஒன்றாகும். ஆனால், இதே மாவட்டத்திற்குட்பட்ட ராஜகோபாலபுரம் பகுதியில் பராமரிப்புப் பணி என்று கூறிவிட்டு சுமார் இரண்டு மாத காலத்திற்கு மேலாகப் பணிகள் நடைபெற்றுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அறவழியில் போராடிய பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் கைது செய்வதாக அச்சுறுத்தி, காவல்துறையின் துணையோடு அப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டது ஜனநாயக விரோதச் செயலாகும் என அவர் வேதனை தெரிவித்தார்.
நிலத்தடி நீர் மாசுபாடும், புற்றுநோய் அபாயமும்
குத்தாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மட்டும் சுமார் 49 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிணறுகளின் செயல்பாடுகளால் அப்பகுதியின் பூமிக்கடியில் பல அடுக்குகளாக வெவ்வேறு ஆழங்களில் இருந்த நிலத்தடி நீர் முற்றிலுமாகக் கெட்டுப் போயுள்ளது. விவசாயத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக இருந்த நீர்நிலைகள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களின் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
தங்களின் உடல்நல பாதிப்புகள் குறித்தும், வாழ்வாதார இழப்புகள் குறித்தும் முறையிடுவதற்காகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அப்பகுதி கோட்டாட்சியரைச் சந்தித்து மனு அளிக்கச் சென்றபோது, அவர் அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுவது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் பேராபத்து
காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாப்பதற்காகத் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது, இனி இப்பகுதிகளில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட மாட்டாது என்றும், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பழைய கிணறுகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், புதிய கிணறுகளை அமைக்கச் சட்டத்தில் இடமில்லை என்பதை உணர்ந்த ஓஎன்ஜிசி நிறுவனம், பழைய கிணறுகளின் வழியாகவே பூமிக்கடியில் பக்கவாட்டில் சுமார் மூன்று கிலோமீட்டர் ஆழத்திற்குத் துளையிட்டு எரிவாயு எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தத் தொழில்நுட்ப அத்துமீறலை கடந்த 2024-ஆம் ஆண்டே கூட்டமைப்பினர் ஆதாரங்களுடன் கண்டறிந்து வெளிப்படுத்தியபோது, தமிழக அரசு தலையிட்டு அதனைத் தடை செய்தது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக மீண்டும் புதிய முறையில் 'பெர்ப்பரேட்டிங் கன்' எனப்படும் கூம்புவடிவ ஜெட் கருவியைப் பூமிக்கடியில் செலுத்தி வெடிக்கச் செய்யும் பணிகளை எண்ணெய் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பூமிக்கடியில் வெடிவைத்துத் தகர்க்கும்போது, மேல்மட்டத்தில் இருக்கும் நன்னீர் அடுக்குகள் உடைந்து, அடிமட்டத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் மற்றும் உப்பு நீருடன் கலந்துவிடுகிறது. இதன் காரணமாகக் குத்தாலம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உப்பாகவும், எண்ணெய் பசையுடனும் மாறி ஒட்டுமொத்தப் பகுதியும் விவசாயத்திற்கு லாயக்கற்றதாகப் பாழடைந்துவிட்டது.
தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நடைமுறையில் இருந்தும், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகள் எவ்விதப் பாதுகாப்பும் இன்றித் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருவது வேளாண் பெருமக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ளும் இத்தகைய மறைமுகத் திட்டங்களைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, தமிழக முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை முழுமையாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் நிரந்தரமாகப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர் ஜெயராமன் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























