மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவு..! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்...
வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவு கூரும் வகையிலும், தேசிய விழாக்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலும், விழா நடைபெறும் நாட்களில் மதுபான விற்பனைக்குத் தடை விதிப்பது வழக்கமான நடைமுறையாகும்.
அந்த வகையில், எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை முழுமையாக மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தீவிர உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஆட்சியரின் கண்டிப்பான உத்தரவு
இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "இந்திய நாட்டின் சுதந்திர தின விழாவைக் முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குள் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அரசு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் (குடு1) அனைத்தும் வரும் 15.08.2026 (சனிக்கிழமை) அன்று முழுவதுமாக மூடப்பட வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவகங்கள், விடுதிகள் மற்றும் பார்கள் உள்ளிட்ட இடங்களில் 'குடு2' மற்றும் 'குடு3' (FL2 / FL3) உரிமம் பெற்று இயங்கி வரும் அனைத்து தனியார் மதுக்கூடங்களும் அன்றைய தினம் முழு நேரமாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
சுதந்திர தினத்தன்று மாவட்டத்தின் எந்தவொரு பகுதியிலும் மதுபானங்கள் விற்பனை செய்யவோ அல்லது பரிமாறவோ கூடாது" என்று ஆட்சியர் தனது உத்தரவில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்படியான கடுமையான நடவடிக்கை
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று ‘உலர் தினம்’ (Dry Day) ஆக அனுசரிக்கப்படுவதால், அன்றைய தினம் மதுபான விற்பனை ஏதேனும் நடைபெறுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை மீறி, மறைமுகமாகவோ அல்லது முறைகேடான வழிகளிலோ மதுபானங்களை விற்பனை செய்ய முற்படும் அரசு மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் (Supervisors), விற்பனையாளர்கள் மற்றும் 'குடு2/குடு3' உரிமம் பெற்ற மதுக்கூடங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின்கீழ் மிகக் கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோரின் உரிமங்கள் உடனடியாக இரத்து செய்யப்படும் என்பதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்புத் தீவிரமாக்கம்
இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எல்லைப் பகுதிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்களில் சட்டவிரோத மது விற்பனை அல்லது கடத்தல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்துத் தெரியவந்தால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேசிய விழாவின் புனிதத்தைப் பேணிப் பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் பொதுமக்கள், மதுபானக் கடை ஊழியர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















