சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதி அரேபிய கடற்பகுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறை மீனவர் உயிரிழந்த நிலையில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சீர்காழி / மயிலாடுதுறை: சவுதி அரேபிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் துப்பாக்கிச்சூட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இச்சம்பவம் தமிழக மீன்பிடி சமூகத்தினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், தொடுவாய் சுனாமி நகர் காந்தி தெருவைச் சேர்ந்த பக்ரிசாமி என்பவரின் மகன் மாவீரன் (40). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக சவுதி அரேபியாவிற்குச் சென்று அங்கு தங்கி மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருடன் கீழமூவர்க்கரையைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் சங்கர், திருமுல்லைவாசலைச் சேர்ந்த சாமிதுரை மகன் பால்ராஜ் மற்றும் கடலூர் மாவட்டம் சொத்திகுப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரும் சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி அதிகாலை இவர்கள் நால்வரும் வழக்கம்போல் படகில் கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அல்லை எல்லைப் பகுதியில் விசைப்படகில் ரோந்து என்ற பெயரில் அத்துமீறி நுழைந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்கள் சென்ற படகை மறித்துச் சூறையாட முயன்றுள்ளனர்.
கொடூரத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு
மீனவர்களின் படகில் இருந்த விலைமதிப்பற்ற மீன்கள், வலைகள் மற்றும் உபகரணங்களைக் கொள்ளையடிக்க முயன்ற கடற்கொள்ளையர்களை, மாவீரன் உள்ளிட்ட மீனவர்கள் வீரியத்துடன் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டது. மீனவர்கள் தொடர்ந்து எதிர்த்துப் போராடியதால் ஆத்திரமடைந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள், தாங்கள் வைத்திருந்த அதிநவீன துப்பாக்கிகளால் மீனவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளனர்.
இந்த திடீர் தாக்குதலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்த மாவீரன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் இருந்த சங்கர் உடலில் குண்டுபாய்ந்து தீவிர காயமடைந்தார். பால்ராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சவுதி கடற்படை மீட்பு
துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் கடற்கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சவுதி அரேபிய கடற்படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதலுக்குள்ளான படகையும், அதில் இருந்த மீனவர்களையும் மீ மீட்டனர். படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சங்கர், பால்ராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மாவீரனின் உடலைக் கைப்பற்றிய சவுதி கடற்படையினர், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு அதிகாரிகளின் விசாரணை
கடல் கடந்து நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், மயிலாடுதுறை மாவட்ட மீன்பிடி உதவி இயக்குநர் மற்றும் திருமுல்லைவாசல் கடலோரக் காவல் குழுமப் போலீசார் விரைந்து செயல்பட்டு, உயிரிழந்த மற்றும் காயமடைந்த மீனவர்களின் விவரங்களைச் சேகரித்தனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு மீன்வளத்துறை தலைமை அலுவலகத்திற்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் உடனடியாக அதிகாரப்பூர்வத் தகவல்களை அனுப்பி வைத்தனர். சவுதியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நிலவரத்தைக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்ணீரில் மூழ்கிய கிராமம் - உறவினர்கள் கோரிக்கை
உயிரிழந்த மாவீரனுக்கு நீலவேணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த மாவீரன் உயிரிழந்த செய்தி கேட்டதும் தொடுவாய் சுனாமி நகர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மாவீரனின் மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுவது பார்ப்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது.
இதுகுறித்து மாவீரனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கையில், "நாட்டின் எல்லை கடந்து உழைக்கச் சென்ற இடத்தில் எம் வீட்டுப் பிள்ளை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த மாவீரனின் உடலை உடனடியாகச் சொந்த ஊரான தொடுவாய்க்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற மூன்று மீனவர்களுக்கும் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மாவீரனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அவரது மனைவிக்கும் வேலைவாய்ப்பும் வழங்கி ஆதரவளிக்க வேண்டும்" என வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாட்டில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர் ஈரானிய கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















