காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - சீர்காழிக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை உதவி ஆய்வாளர் சதகத்துல்லா தலைமையிலான 90 பேர் சீர்காழிக்கு வருகை புரிந்துள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடி 13 வது பட்டாலியனை சேர்ந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சீர்காழியில் முகாம் இட்டுள்ளனர்.
தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட அதிக தீவிரமடைந்தது. அதன் காரணமாக கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. அதனால் கிருஷ்ணராஜா சாகர் மற்றும் கபினி உள்ளிட்ட அணைகளில் நீர் வழிந்து வருவதினால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
நிரம்பி வழியும் மேட்டூர் அணை
அதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து வந்த நிலையில் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டின் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள 11 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
காவிரி ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பாதுகாப்பாக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி கடலில் வந்து கலக்கும் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று கள ஆய்வு நடத்தினார். அதனை தொடர்ந்து அனைத்து துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டமும் நடைபெற்றுள்ளது.
அதேபோன்று வருவாய் துறையினர், காவல் துறையினர் ஆட்டோ ஒலிபெருக்கியின் மூலம் ஆற்றங்கரை ஓரமாக மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது படகின் மூலமோ செல்ல கூடாது எனவும், தண்ணீர் சூழும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
பேரிடர் மீட்பு குழு
இந்நிலையில் இன்று மாலை அல்லது இரவுக்குள் காவிரி நீரானது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்து சேரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோர திட்டு கிராம மக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் சீர்காழி வருகை புரிந்துள்ளனர். ஆவடி 13 வது பட்டாலியனை சேர்ந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை உதவி ஆய்வாளர் சதகத்துல்லா தலைமையிலான 90 பேர் சீர்காழி வருகை புரிந்துள்ளனர்.
ரப்பர் மீட்பு படகு, மரம் அறுக்கும் இயந்திரம், ஜெனரேட்டர் உள்ளிட்ட 70 மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, அளக்குடி உள்ளிட்ட திட்டு கிராமம் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.