தீபாவளி பாதுகாப்பு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! ஆட்சியரின் எச்சரிக்கை, முக்கிய வழிகாட்டுதல்கள் இதோ!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளி பாதுகாப்பு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லாப் பண்டிகையாகக் கொண்டாடும் நோக்கில், பட்டாசு விற்பனையாளர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வெடிபொருட்கள் கையாளுதல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாதுகாப்பு விதிகளை மீறும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த கால விபத்துகளை மனதில் கொள்க: ஆட்சியர் அறிவுரை
அப்போது கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக் கடைகளில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகக் கடைபிடிக்கப்படுகின்றனவா எனத் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் மாவட்டத்தில் நடந்துள்ள பட்டாசு வெடிவிபத்துக்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு விற்பனைக் கடைகள் மிகவும் பாதுகாப்பாகவும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றியும் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பட்டாசுக் கடைகளுக்கான கட்டாய பாதுகாப்பு விதிகள்
பட்டாசு விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக எடுத்துரைத்தார்.
அவர் தெரிவித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு
*கட்டிட அமைப்பு: பட்டாசு சில்லறை விற்பனைக் கடைகள் தனிக் கட்டிடத்தில் மட்டுமே இயங்க வேண்டும். அதன் மேல்கூரை கான்கிரீட்டினால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஓலை அல்லது தற்காலிக செட்டுகள், குறிப்பாக கடையின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கக் கூடாது.
*அவசர கால வழி: கடைக்குச் செல்ல பொதுமக்கள் பயன்படுத்தும் அணுகுசாலை அகலமாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக, அவசர காலத்தில் வெளியேறும் இரண்டாவது வாசல் திறந்தவெளி பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதை விற்பனையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
*மின்சார பாதுகாப்பு: மின் மீட்டர் கட்டாயம் கடையின் வெளிபுறத்தில் தான் இருக்க வேண்டும். அனைத்து மின் இணைப்புகளும் PVC Pipe / Concealed Wiring முறையில் இருக்க வேண்டும். திறந்த நிலை மின் இணைப்புகளை (Naked Wiring) பயன்படுத்தக் கூடாது. மின் மாற்றிகள் (Electrical Transformers) கடைக்கு அருகில் இருக்கக் கூடாது.
சுற்றுப்புறம்: பட்டாசுக் கடைக்கு அருகில் எளிதில் தீப்பற்றக்கூடிய ஹோட்டல் அல்லது எண்ணெய் கடைகள் இயங்கக் கூடாது. மேலும், மாடிப்படிக்கு அடியில் பட்டாசுக் கடைகள் இருக்கக் கூடாது.
*தீயணைப்பு சாதனங்கள்: ஒவ்வொரு கடையிலும் குறைந்தது இரண்டு தண்ணீர் வாளிகள் மற்றும் இரண்டு மணல் வாளிகள் கட்டாயம் இருக்க வேண்டும். மணல் வாளிகளில் முழுமையாக மணல் நிரப்பி வைக்கப்பட வேண்டும். கூடுதலாக, 200 லிட்டர் தண்ணீர் பீப்பாய் ஒன்றும் இருப்பு வைக்கப்பட வேண்டும்.
*தீயணைப்பான் கருவிகள்: தீ அணைப்பான்கள் Water Cor-1 மற்றும் DCP-2 என்ற அளவுகளில் உரிய முறையில் புதுப்பித்த நிலையில் கடைகளில் தயாராக வைத்திருக்க வேண்டும்.
*பொது அறிவிப்பு: "புகைப்பிடித்தல் கூடாது" என்ற அறிவிப்பு பலகை அனைத்துப் பட்டாசுக் கடைகளிலும் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
கூட்டுக் குழுவின் தொடர் ஆய்வுகள்
இந்த விதிமுறைகள் முறையாகக் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சில்லறை வெடி விற்பனைக் கடைகளை தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய கூட்டுக் குழு தொடர்ந்து ஆய்வு செய்யும் எனவும், ஆய்வின்போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் கடைகள் மீது எவ்வித சமரசமும் இன்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் ரத்து செய்வதுடன், கடைகள் சீல் வைக்கப்படும்" எனவும் ஆட்சியர் எச்சரித்தார்.
இறுதியாக, தீபாவளி பண்டிகையின் மகிழ்ச்சி விபத்தால் கலையாமல் இருக்க, அனைத்துப் பட்டாசு விற்பனையாளர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டார். இந்தப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மூலம், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் விபத்தில்லா மகிழ்ச்சியான தீபாவளியைக் கொண்டாடுவது உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் முகுந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துவடிவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.






















