தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது எப்படி? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் அசத்தல் பயிலரங்கம்!
மன்னன்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் 3 நாள் தமிழ் மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தலில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏ.வி.சி. கல்லூரியின் தமிழாய்வுத்துறையும், இந்திய அரசின் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் (CIIL) இணைந்து நடத்தும் ‘தமிழ் மொழிபெயர்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்’ கடந்த ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று நாள்கள் (ஜூன் 30, ஜூலை 01, 02) நடைபெறும் இப்பயிலரங்கின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
உலகளாவிய வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியம்
இப்பயிலரங்கத் தொடக்கவிழாவிற்கு ஏ.வி.சி. கல்லூரி முதல்வர் முனைவர் இரா.நாகராஜன் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில், இன்றைய நவீன காலகட்டத்தில் மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை மிக விரிவாக எடுத்துரைத்தார். அறிவியல் தொழில்நுட்பம், உலகளாவிய கலைகள் மற்றும் உலகப் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு ஒரு பாலமாகத் திகழ்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய அறிவுப் பகிர்வுக்கு மொழிபெயர்ப்பு இன்றியமையாதத் தேவை என்றும் குறிப்பிட்டார்.
பயிலரங்க நோக்கம் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு
தொடர்ந்து, தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு பயிலரங்க நோக்கவுரையாற்றினார். தமிழ் பயிலும் மாணவர்கள், இளம் ஆய்வாளர்கள் மற்றும் மொழிச் செயல்பாட்டாளர்கள் மொழிபெயர்ப்புத் துறையில் கொள்ள வேண்டிய அர்ப்பணிப்பு உணர்வை அவர் வலியுறுத்தினார். மேலும், காலத்திற்கேற்ப புதிய மொழிபெயர்ப்புக் கொள்கைகளை வகுப்பதன் அவசியத்தையும், தமிழ் மொழியின் செறிவை உலகம் முழுதும் கொண்டு சேர்க்க வேண்டிய தற்போதைய தேவைகளையும் பட்டியலிட்டு, இந்த பயிலரங்கின் மூலம் ஆய்வாளர்கள் பெறப்போகும் பயன்களை விளக்கினார்.
மொழிபெயர்ப்புக் கொள்கைகளில் அறம்
தொடக்கவிழாவின் முக்கிய நிகழ்வாகச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேராசிரியர் முனைவர் ப.மணிமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ‘மொழிபெயர்ப்புக் கொள்கைகளில் அறம்’ என்னும் தலைப்பில் பேசிய அவர்:
மொழிபெயர்ப்பின் அடிப்படைத் கோட்பாடுகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மை மற்றும் அறம் குறித்து விளக்கினார். அறமற்ற மொழிபெயர்ப்புகளால் சமுதாயத்தில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் தவறான புரிதல்கள் குறித்து எச்சரித்தார். பிற மொழிகளில் உள்ள சிறந்த கருத்தியல் இணைவுகளைத் தமிழுக்கும், தமிழ் மொழியின் தனித்துவமிக்க சிறப்புக் கூறுகளைப் பிற மொழிகளுக்கும் நடுநிலையோடு கொண்டு சேர்க்கும் உழைப்பின் முக்கியத்துவத்தையும் அதன் சமூகப் பயன்களையும் எடுத்துரைத்தார்.
கலைச்சொல் மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்புப் பயிற்சிகள்
தொடக்கவிழாவைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் நிபுணர்கள் மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சிகளை வழங்கினர். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக மொழிபெயர்ப்பியல் துறைப் பேராசிரியரும் தலைவருமாகிய முனைவர் இரா.சு.முருகன், ‘கலைச்சொல் மொழிபெயர்ப்பு சிக்கல்களின் தன்மையும் சாத்தியமான தீர்வுகளும்’ என்னும் தலைப்பில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வில், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறைப் பேராசிரியர் முனைவர் எஸ்.கவிதா, ‘இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் விரிவான பயிற்சிப் பட்டறையை நடத்தினார்.
நிறைவு மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு
முன்னதாக, பயிலரங்கத் தொடக்கவிழா நிகழ்விற்கு முனைவர் ந.சரவணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இளநிலை ஆய்வு உதவியாளர் முனைவர் ம.மூவேந்தன் நன்றியுரை ஆற்றினார். முனைவர் சு.விமல்ராஜ் ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் சுவாரசியமாகத் தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் மைசூர் தேசிய மொழிபெயர்ப்புத் திட்ட இளநிலை ஆய்வு உதவியாளர் முனைவர் எஸ்.சுரேஷ்குமார், ஏ.வி.சி. கல்லூரி உள்தரக்கட்டுப்பாட்டு இயக்குநர் முனைவர் எஸ்.அன்பு சீனிவாசன், தமிழார்வலர் இரெ.மருதசாமி மற்றும் பிறதுறைப் பேராசிரியர்கள், திரளான ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும், ஏ.வி.சி கல்லூரி தமிழாய்வுத்துறையும் இணைந்து செய்திருந்தன.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























