ஆபீஸை பூட்டிவிட்டு கிராமங்களுக்கு படையெடுக்கும் அதிகாரிகள்: மயிலாடுதுறையில் ஜூலை 15-ல் நடக்கப் போவது என்ன?
மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கலெக்டர் & அதிகாரிகள் 24 மணி நேர நேரடி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

மயிலாடுதுறை: மக்களை நாடி, மக்களின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் அரசு இயந்திரமே நேரடியாகக் களத்திற்கு வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற மகத்தான திட்டத்தை கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரால் அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை வட்ட அளவில் வரும் புதன்கிழமை (15.07.2026) அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை உயர் அதிகாரிகள் நேரடியாகத் தங்கி, அதிரடி கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களின் நீண்ட நாள் குறைகளுக்குத் தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 மணி நேர தொடர் கள ஆய்வு
திட்டத்தின் கால அட்டவணை
இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமே, மாவட்டத்தின் தலைமை அதிகாரியான ஆட்சியர் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் தாலுகா எல்லைக்குள்ளேயே தங்கி மக்களின் குறைகளைக் கேட்பதுதான். அதன்படி, மயிலாடுதுறை வட்டத்தில் நடைபெற உள்ள இத்திட்டத்தின் கால அட்டவணை: தொடக்கம்: 15.07.2026, புதன்கிழமை காலை 09.00 மணி நிறைவு: 16.07.2026, வியாழக்கிழமை காலை 09.00 மணி
இந்த 24 மணி நேரத் தொடர் கள ஆய்வின் போது, மயிலாடுதுறை வட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாயவிலைக் கடைகள், அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் (VAO Office) மற்றும் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் சேவை மையங்களில் அதிகாரிகள் நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
அரசின் நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி மக்களுக்குச் சென்றடைகிறதா என்பது இச்சோதனையில் முதன்மையாகக் கண்காணிக்கப்படும்.
கிராமங்களுக்கு அதிகாரிகள் ஒதுக்கீடு: குறைகளைத் தெரிவிக்க அழைப்பு
மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம மக்களும் தங்களின் குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு கிராமத்திற்கும் பிரத்யேகமாக அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள்:
"பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதிகள், தெருவிளக்குகள், வடிகால் அமைப்புகள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை போன்ற அனைத்து விதமான குறைகளையும், தங்களது கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் நேரடியாகத் தெரிவித்து மனுக்களாக அளிக்கலாம். தமிழ்நாடு அரசின் இந்த உன்னதமான திட்டத்தைப் பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், கேட்டுக் கொண்டுள்ளார்.
உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் தயார்!
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, உடனடியாகச் சம்பந்தப்பட்ட துறைகளின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். கள ஆய்வின் போதே சாத்தியமான கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், இதர மனுக்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தயாராக உள்ளது.
அரசு அதிகாரிகள் தாலுகா அளவிலேயே தங்கி ஆய்வு செய்வதால், நிர்வாக நடைமுறைகளில் உள்ள சுணக்கங்கள் களையப்பட்டு, மக்களுக்கும் அரசுக்குமான இடைவெளி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மயிலாடுதுறை வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்கள் பகுதி மேம்பாட்டிற்கான கோரிக்கைகளை முன்வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Before You Go
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























