பாய்ச்சலுக்கு தயாராகும் குதிரை மற்றும் மாடுகள் - எங்கே தெரியுமா...?
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் ரேக்ளா பந்தயத்துக்காக குதிரை, மாடுகளுக்கு தீவிர ஓட்டப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் நடைபெற உள்ள ரேக்ளா பந்தயத்திற்காக குதிரைகள் மற்றும் மாடுகளுக்கு தீவிர ஓட்டப்பயிற்சி அளித்து தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.
எல்கை பந்தயம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்ற இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார். காலை தொடங்கி மாலை வரை நடைபெறும் ரேக்ளா பந்தயத்தில் சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.
ஆலோசனை கூட்டம்
பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் 2020, 21, 22 ஆகிய மூன்று ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட சில காரணங்களால் தடைப்பட்டு இருந்தது. தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக காணும் பொங்கல் அன்று எல்கை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2025 -ம் ஆண்டு எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த அனைத்து கட்சிகள்
திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆண்டு எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்துவது, எல்கை பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், வருவாய் துறையினர், காவல்துறையினரை அழைப்பது, 500 மேற்பட்ட ரேக்ளா மாடு மற்றும் குதிரைகளை பங்கேற்க செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அதிமுக, திமுக, பாமக, பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.
போட்டியில் வகைகள்
சிறிய மாடுகளுக்கான பந்தயம் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச் யில் தொடங்கி என்.என்.சாவடி தொடக்கப்பள்ளி வரை 5 கி.மீட்டரும், பின்னர் நடு மாடுகள், பெரிய மாடுகளுக்கான பந்தயம் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச் யில் தொடங்கி அனந்தமங்கலம் ஆர்ச் மற்றும் மகிமலையரு பாலம் வரையிலும். அதுபோன்று, குதிரைகளுக்கான ரேக்ளா ரேஸ் திருக்கடையூர் வள்ளியம்மை ஆர்ச்யில் தொடங்கி தரங்கம்பாடி பேருந்து நிலையம் வரை 10 கி.மீ. நடைபெறும். இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திருக்கடையூரில் கூடுவார்கள்.
தீவிர பயிற்சி
இந்த போட்டியில் பங்கேற்கும் குதிரைகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை ஓடும் நடைபயிற்சி, அதனைத் தொடர்ந்து குளத்தில் நீச்சல் பயிற்சி, கொள்ளு , கேரட் உள்ளிட்ட கலவை கொண்ட சத்தான உணவுகள், 10 கிலோ மீட்டர் தூரம் ரேக்ளா வண்டியில் பூட்டி அதிவேகமான ஓட்டப்பயிற்சி என்று குதிரைகளை தயார்படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினமும் இந்த பணிகளுக்கு ஒரு குதிரைக்கு மட்டும் 500 ரூபாய் வரையில் செலவு பிடிக்கும் நிலையில் பணத்திற்காக இப்படி தயார் செய்யவில்லை என்றும் தமிழர்களின் பாரம்பரியமான இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் குதிரை மற்றும் மாடுகளை தீவிரமாக தயார் செய்து வருவதாக போட்டியில் பங்கு பெற உள்ள வீரர்கள் தெரிவித்துள்ளனர்.