பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை - சுகாதார ஆய்வாளர் போக்சோவில் கைது
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்த நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளரை போலீசார் போக்சோ வழக்கில் கைது சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்த தனியார் நர்சிங் கல்லூரி 17 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்துள்ளனர்.
17 வயது மாணவிக்கு பாலியல் சீண்டல்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கூறைநாடு பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான செந்தில்நாதன். இவர் மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த 17 வயது தனியார் நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

ஹெல்ப்லைன்' எண் மூலம் புகார்
கடந்த மாதம் டிசம்பர் 21-ஆம் தேதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டபோது அந்த மாணவி செந்தில்நாதனை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் தொடர்ந்து மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி 'ஹெல்ப்லைன்' எண் மூலம் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
போக்சோ வழக்கில் கைது
விசாரணையில் மாணவியிடம் சுகாதார ஆய்வாளர் செந்தில்நாதன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக களப்பணியாளர் ஆரோக்கியராஜ் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சுகாதார ஆய்வாளர் செந்தில்நாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். அரசு மருத்துவமனைக்கு பயிற்சிக்கு சென்ற நர்சிங் மாணவியிடம் சுகாதார ஆய்வாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Sea Bridge : கடல் மேல் பாலம்.. லைட் ஹவுஸ் TO நீலாங்கரை.. தலைகீழாய் மாற உள்ள சென்னை..!

தெரிந்த நபர்களால் பாலியல் துன்புறுத்தல்
குழந்தைகள் வீடுகளிலும், வீடுகளில் அருகிலுள்ள நபர்களை மட்டுமே நம்பி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வக்கிர புத்தி கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் குழந்தைகளை கடவுளுக்கு நிகராக எண்ணாமல், அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டல்களிலும், சிறு பிள்ளைகளுக்கு திருமண ஆசை ஏற்படுத்துவதும் என துன்புறுத்தல்களும் செய்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவை அளிப்பதில் தற்போது விதிவிலக்காக யாரையும் கூற முடியாத நிலையில், ஏராளமான பெண் குழந்தைகள் இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேலும், இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு கூடுதல் முக்கியத்துவம் அளித்து இவற்றை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல பெற்றோர்களும், சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






















