Chennai Sea Bridge: கடல் மேல் பாலம்.. லைட் ஹவுஸ் TO நீலாங்கரை.. தலைகீழாய் மாற உள்ள சென்னை..!
Chennai Light House-Neelankarai Sea Bridge: சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு, கடல் மீது பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Light House-Neelankarai Sea Bridge: சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், மும்பையில் உள்ள அடல் சேது பாலம் போன்று சென்னையில் கடல் மீது பாலம் அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சாலை அமைப்பது, பாலம் அமைப்பது என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன.
மும்பை போன்று சென்னையிலும்..
அந்த வகையில் மும்பையில் அடல் சேதுபாலும் சுமார் ரூ.17000 கோடி மதிப்பிற்கு கட்டப்பட்டுள்ளது. இந்த சாலை கனரக வாகனங்கள் செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதேபோன்று சென்னையிலும் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று சட்டசபையில் இதுகுறித்து துணை சபாநாயகர் பிச்சாண்டி, சென்னையில் மும்பையில் இருப்பதை போன்று பாலம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் வேலு பதிலளித்து பேசுகையில், சென்னை கடற்கரை விளக்கத்திலிருந்து, நீலாங்கரை வரை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் கடல் மீது பாலம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என அறிக்கை தயாரிக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது என தெரிவித்தார்.
திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி
ஏற்கனவே கடல் சார் வாரியம் உள்ளது. அந்த வாரியம் வழியாக சிறு துறைமுகங்களை மேம்படுத்தி வருகிறோம். அடல் சேது பாலத்தை நேரடியாக சென்று பார்வையிட்டு வந்திருக்கிறேன். அதன் பிறகு கலங்கரை விளக்கத்திலிருந்து முதல் கட்டமாக நீலாங்கரை வரை, கடல் மீது பாலம் அமைக்கும் பணிக்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
யார் யாருக்கு பயன் ?
திட்ட அறிக்கை தயார் செய்த பிறகே இந்தப் பாலம் மத்திய அரசு நிதி பங்களிப்புடன் செயல்பட உள்ளதா? அல்லது தனியார் பங்களிப்புடன் செயல்பட உள்ளதா என தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று இந்த பாலம் அமைக்கப்பட்டால் சென்னை புறநகர் பகுதியில் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இதேபோன்று கடல் மீது பாலம் அமைக்கும் போது, கனரக வாகனங்கள் மற்றும் துறைமுகத்திற்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு, இந்த சாலை வரப் பிரசாதமாக அமைய உள்ளது. திட்ட அறிக்கை தயார் செய்த பிறகு இதன் மதிப்பீடு தெரியவரும். அரசு இந்த பாலத்தை அமைப்பதில் முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

