எங்களை எப்போ சார் பணி நிரந்தம் செய்வீங்க? - 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் வலுக்கும் கோரிக்கை
பள்ளிக்கல்வித்துறை அரசாணை 175-ன் படி 6500 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்ததை போல, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அரசாணை 175-ன் மூலம் தற்போது 6500 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரந்தரம் செய்ததை போல, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிக்கல்வி செயலாளரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
பகுதிநேர சிறப்பாசிரியர்கள்
தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும் இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ஊதியம் இல்லாத மே மாதம்
கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து இவர்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டு, தற்போது 12,500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருகின்றனர். பகுதி நேர பணியாக இருந்த போதிலும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற தமிழ்நாடு அரசின் மீதான நம்பிக்கையில்தான் அவர்கள் இந்தப் பணியில் சேர்ந்தனர். ஆனால் 13 ஆண்டுகள் முடிந்த பின்னும் கூட இன்றுவரை அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழ்நாடு அரசு மறுத்து வருவது மிகுந்த வேதனைக்குரியது. அதுமட்டுமின்றி மாநில அரசு வழங்கிய ஊதிய உயர்வை அலுவலகப் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு, ஆசிரியர்களுக்கு வழங்க மறுக்கும் தமிழ்நாடு அரசின் செயல் பெருங்கொடுமையாகும். மேலும் இவர்களுக்கு மட்டும் ஆண்டுகளுக்கு 11 மாதம் தான் என்பது போல ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விடுமுறை காலத்தில் அந்த குறைந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை.
பள்ளிக்கல்வித்துறையில் அரசாணை 175
இந்நிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அரசாணை 175 மூலமாக நடுநிலைப் பள்ளிகளில் தற்காலிக பணியிடங்களில் இதுவரை பணிபுரிந்த 1581 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 3565 பட்டதாரி ஆசிரியர்களை, கடந்த 16 -ம் தேதி அன்று நிரந்தரப் பணியிடங்களாக்கி ஆணையிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்விச் சட்டம் 2009 -ன் படி, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 2011-2012 ஆம் நிதியாண்டில் தொடக்கக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட தற்காலிக பணியிடங்களில் இந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
தொடர்ந்து எழும் கோரிக்கை
இவர்களைப் போலவே அரசுப் பள்ளிகளில் 2012-ஆம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் பாடங்களில் தற்போது 12 ஆயிரம் பேர் ரூபாய் 12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 175 அரசாணையின் மூலமாக 6500 ஆசிரியர்களின் தற்காலிக பணியிடங்களை நிரந்தரப்படுத்தியதை போலவே, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிக்கல்வி செயலாளரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், கடலூர் செந்தில்குமார்,தண்டபாணி, சுரேஷ், நாகலட்சுமி, முரளி, ஆனந்தன், உள்ளிட்டோர் மனு கொடுத்து வலியுறுத்தினர்.
மேலும் இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில், தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 181 வது வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 14 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிவதை கைவிட்டு, நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையாக தொடர்ந்து எழுந்து வருகிறது. இதனை தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.