உலக சுற்றுச்சூழல் தினம்
 
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 5,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று (01-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
அமைச்சர் பி.மூர்த்தி
 
அந்த வகையில் மதுரை மாவட்டம், அழகர் கோயிலில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில்  அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், "இன்றைய காலத்தில், எது பலன் தரக்கூடிய பணப்பயிர் என்பதை அறிந்து  நட்டு வளர்த்தால் அது பயிர் விவசாயத்தை விட பல மடங்கு வருவாயை தரும். எனவே இப்போது தரப்படுகிற இந்த மரக்கன்றுகளை வளர்த்து உருவாக்கிவிட்டால் அதன் மூலமாக வரக்கூடிய வருவாய் மிகப்பெரிய அளவில் உயரும். வருவாயோடு சுற்றுச்சூழலும் முக்கியம் என்கிற வகையில் வழங்கப்படும் மரக்கன்றுகளை உங்கள் வீடுகளில், முடிந்த இடங்களில் எல்லாம் நட்டு வைக்க வேண்டும். இது பார்க்க எளிமையான நிகழ்வாக இருந்தாலும், மக்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்வாக இது இருக்கிறது. காலத்தின் சூழ்நிலை, நாட்டின் எதிர்காலம் இவை அனைத்தையும் மனதில் வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துகள்" எனக்கூறினார்.
 
மரக்கன்று நடவு செய்ய ஆலோசனை
 
இவ்விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.  இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு மதுரை  மாவட்டத்தில் மட்டும் 4,78,543 மரங்களும், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும்  விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது. மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.