’வழக்குப்பதிவு செய்க’ : அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து முதுகுளத்தூரில் போஸ்டர்கள்..
முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரனை சாதியைச் சொல்லி தரக்குறைவாக திட்டியதாக வந்த புகாரை தொடர்ந்து ராஜகண்ணப்பனுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டும் அவருக்கு எதிர்ப்பு குறைந்தபாடில்லை.
முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரனை சாதியைச் சொல்லி தரக்குறைவாக திட்டியதாக வந்த புகாரை தொடர்ந்து ராஜகண்ணப்பனுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டும் அவருக்கு எதிர்ப்பு குறைந்தபாடில்லை. யார் இந்த ராஜகண்ணப்பன் இவரைபற்றி விரிவாக போர்ப்போம்.. தமிழ்நாட்டில் 1991ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் பொதுப் பணித் துறை,மின்சாரதுறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட மூன்று துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் கண்ணப்பன்.
யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர். 1991-96 களில் அ.தி.மு.க ஆட்சியில் கொடி கட்டிப் பறந்து கோடிகளை சுருட்டிய அமைச்சர்களில் இவரும் ஒருவர். அதன் காரணமாக ஊழல் புகார்களுக்கு ஆளானவர். குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடந்த ஊழல்கள் தொடர்பாக இவர் மீதும் வழக்குகளும் பதிவானது. வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவும், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் அ.தி.மு.க.வுக்கு எதிராக போட்டி அ.தி.மு.க.வை, முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, அரங்கநாயகம் போன்றவர்களுடன் இணைந்து நடத்தினார். பின்னர் போட்டி அதிமுகவை கலைத்து விட்டு மீண்டும் அ.தி.மு.கவில் ஐக்கியமானார். ஆனால், பழைய முக்கியத்துவத்தை கண்ணப்பனுக்கு தர ஜெயலலிதா விரும்பவில்லை. கட்சியில் எந்த பொறுப்பும் தராமல் ஓரங்கட்டி வைத்தார். இதன்காரணமாக அதிருப்தியில் இருந்த கண்ணப்பன் புதுக் கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்தார்.
தமிழகத்தில் பெரும்பான்மையான சமுதாயங்களில் ஒன்றான யாதவர் இனத்தை பின்னணியாக கொண்டு ஒருதனிக் கட்சியை ஆரம்பிக்கத் திட்டமிட்டு அதற்காக தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி,2000 ஆம் ஆண்டில் "மக்கள் தமிழ் தேசம்" என்ற கட்சியை தொடங்கி 2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தமிழ் தேசம் கட்சித்தலைவராக இருந்த இவர் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டுயிட்டு அதிலும் தோல்வியடைந்தார். மேலும் யாதவர்கள் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு அவரால் தொடர்ந்து அந்தக் கட்சியை நடத்த முடியவில்லை. பின்னர் கட்சியை கலைத்துவிட்டு 2006-ல் திமுக-வில் இணைந்து, இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2009-ல் மீண்டும் அதிமுக-வுக்குத் தாவினார். 2011 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்தாலும், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட கண்ணப்பன் தோல்வியையே தழுவினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-வில் போட்டியிட சீட் கிடைக்காத ஏமாற்றத்தில் மீண்டும் திமுக-வுக்குத் தாவினார். யாதவர் சமுதாயத்தில் செல்வாக்குடன் திகழ்வதால், கட்சி மாறுவதில் அவர் களைத்துப்போனாலும் சலைத்துக்கொள்ளாமல் திமுகவும் இணைத்துக்கொண்டது.
இதனை தொடர்ந்து தான் சார்ந்த யாதவ சமூக மக்களிடமும் தனி செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்டதற்கு காரணம், இவரது முயற்சியால்தான் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் 1996-ம் ஆண்டு, வீரன் அழகு முத்துக்கோன் சிலை அமைக்கப்பட்டது. அந்தச் சிலை அமைக்கப்பட்டதில் யாதவ சமுதாய மக்களிடையே கண்ணப்பனின் புகழ் மேலும் கூடியது. ராஜ கண்ணப்பன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும்,2005 தோல்விக்குப் பிறகு இந்த மாவட்டத்திற்கு பெரிதாக வந்ததில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சாதி ஓட்டுக்கள் மொத்தமாக தமக்கு விழும் என்ற நம்பிக்கையில், இங்கு போட்டியிட்டார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. முதுகுளத்தூர் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமியின் மனைவியும் மாநில மகளிர் அணி இணைச் செயலாளருமான கீர்த்திகாவை எதிர்கொண்டார்.
அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ முருகன் போட்டியிட்டு 19,669 வாக்குகள் பெற்று முக்குலத்தோர் வாக்குகளை பிரித்ததால், கொரோனா காலங்களில் தன் கணவருடன் இணைந்து தொகுதி முழுவதும் சென்று வீடு வீடாக காய்கறி மற்றும் உணவு பொருட்களின் தொகுப்பு வழங்கிய கீர்த்திகா முனியசாமியை விட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆன நிலையில், திமுக ஆட்சி அமைந்ததும் அவருக்கு மிகவும் வலிமையான துறையான போக்குவரத்துத் துறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு சிவகங்கையில் அவருடைய இல்லத்தில் தன்னை சந்திக்க வருமாறு இரண்டு பிடிஓக்களை வரவழைத்து அதில், ஒருவரான தலித் சமுதாயத்தை சேர்ந்த ராஜேந்திரனை சாதியை சொல்லி பேசி,ஒருமையில் அழைத்து இழிவு படுத்தியதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் வேதனையுடன் தெரிவித்த தகவல், தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகப் பரவியதையடுத்து, துபாயில் இருந்து வந்த கையோடு தனது ஆட்சியின் முதல் இலாகா மாற்றத்தை அதிரடியாக மாற்றி, அமைச்சா் ராஜகண்ணப்பன் வசமிருந்த போக்குவரத்துத் துறை, அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அவா் வகித்துவந்த, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறை பொறுப்பு, ராஜ கண்ணப்பனிடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்னப்பனுக்கு எதிராக தேவேந்திரகுல வேளாளர் மற்றும் பிஜேபி உள்ளிட்ட அமைப்பினர் சுவரொட்டிகள் ஒட்டி இருக்கிறார்கள், அந்த சுவரொட்டிகளில், அமைச்சர் பதவியை விட்டு நீக்கம் செய்யவும், தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.