மேலும் அறிய
Advertisement
சிவகங்கை : ஆயுதக்கிடங்கு, வாமனக் கல்வெட்டு... கீழடியைப்போல் ஒரு ஆச்சரியம் !
நாயக்கர் கால வாமனக் கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல் நடைக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி யில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. கொரோனா 2 அலை ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆச்சரியம் தரும் கீழடியைப் போல் சிவகங்கை மாவட்டத்தில் தொல்லியல் விஷயங்கள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
இந்நிலையில சிவகங்கை அருகே உள்ள சோழபுரத்தில் 16-ஆம்,17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வாமனக் கல் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. சோழபுரம் குண்டாங்கண்மாயில் அடையாளம் காணமுடியாத உருவம் பொறித்த கல் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் கொல்லங்குடி கா.காளிராசா, தலைவர் சுந்தரராஜன்,செயலர் நரசிம்மன், ஆசிரியர் ஆரோக்கிய சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொல் நடைக்குழு நிறுவனர் கூறுகையில், “சோழபுரம் கிழக்கு குடியிருப்பை ஒட்டிய குண்டங்கண்மாய் உள்வாய் கடைப் பகுதியில் 16-ஆம் ,17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனக்கல் ஒன்று அடையாளங்காணப் பெற்றுள்ளது. மதுரையில் விஜய நகரப் பேரரசுக்குப் பின் ஆட்சிக்கு வந்த நாயக்கர் மதுரையைச் சுற்றியுள்ள பகுதியை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செலுத்தினர். சக்கந்திப் பாளையத்தில் அடங்கிய பகுதியாக சோழபுரம் இருந்திருக்கலாம்.
வாமன உருவம்
வாமன அவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகும், . மாவலி சக்கரவர்த்தியின் கர்வம் அடக்க மூன்றடி உயரம் கொண்ட ஏழை அந்தனராகச் சென்று தன் காலடியில் மூன்றடி நிலம் கேட்டு உலகை அளந்த இவ்வாமன உருவம் நிலம் தொடர்பான ஆவணங்களில் அரசர் காலத்தில் பொறிக்கப் பெற்றுள்ளது. இங்கு காணப்பெறும் வாமன உருவம் ஒரு கையில் விரித்த குடை, தலையில் குடுமி, மார்பில் முப்புரி நூல், இடுப்பில் பஞ்சகச்சம் ஆகியவற்றோடு மற்றோரு கையில் கெண்டியில்லாமல் ஊன்று கோலுடன் காணப்படுகிறது.
கல்தூண்
நான்கரை அடி உயரமுள்ள நான்கு பக்கங்களைக் கொண்ட கல்தூண் ஒன்று செங்குத்தாக நடப்பெற்றுள்ளது. அதில் ஒரு பக்கம் வாமன உருவம் புடைப்புச் சிற்பமாக காட்டப்பெற்றுள்ளது. மற்றொரு பக்கத்தில் கல்வெட்டு 30 வரிகள் எழுதப்பெற்றுள்ளன, அவை மிகவும் சிதைந்த நிலையில் காணப்பெறுகின்றன.
கல்வெட்டு செய்தி
ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் மங்களச் சொல்லோடு கல்வெட்டு தொடங்குகிறது. அதன் பின் சகாப்த ஆண்டு குறிக்கப் பெற்றுள்ளது, அது மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. காத்தம நாயக்கர் எனும் பெயர் தெரிகிறது, இவர் அக்காலத்திய அரச பிரதிநிதியாக இருந்திருக்கலாம். அக்கல்வெட்டில் மதுனா ஆலங்குளம் குண்டேந்தல் குத்திக்குளம் பெருமாளக்குளம் கோரத்தி கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இடையில் பத்து வரிகளுக்கு மேல் பொருள் கொள்ளமுடியாத அளவிற்கு சிதைந்துள்ளன. இறுதியாக இதற்கு கேடு விளைவிப்பவர் யாரகிலும் கங்கைக்கரையிலே காரம் பசுவை கொன்ற தோசத்தில் போகக்கடவதாவது. என முடிகிறது. நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டோ அல்லது தானம் தொடர்பான காரணத்தினாலோ குளம் கண்மாய்கள் அளவிடப்பட்டு வெளிப்படுத்தும் விதமாக வாமன உருவத்தோடு இக்கல்வெட்டு அமைக்கப் பெற்றிருக்கலாம். இக்கல்வெட்டு குறித்து மேலும் தகவல் தேடும்போது இக்கல்வெட்டு வாசிக்க முடியாத நிலையில் உள்ளதாக ஆங்கிலேயர் காலத்தில் 1882-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பெற்றுள்ளது.
வாமனக்கல்லும் நாயக்கர் கல்வெட்டும்
கொல்லங்குடி வீரமுத்துப்பட்டியை அடுத்த சிறுசெங்குளிப்பட்டி வயல் பகுதியில் கிடைத்த திருமலை காத்த சேதுபதி காளையார்கோவில் காளீசுவரருக்கு பிரம தேயமாக வழங்கிய கல்வெட்டு வாமன உருவத்தோடு அமைக்கப் பெற்றிருந்ததும் சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் திருவாழிச் சின்னத்துடன் வண்டியூர் பெருமாளுக்கு தானமாக வழங்கப்பெற்ற நாயக்கர் கால கல்வெட்டும் முன்னர் கிடைத்தது, இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஆயுதக்கிடங்கு
கோட்டையாகக் கருதப்படும் இடத்தின் நடுப்பகுதியில் சிதைவுறாமல் இருக்கும் சின்ன அறை போன்ற வடிவம் ஆயுதக்கிடங்காக இருந்திருக்கலாம். கல்லும் மண்ணும் வரலாறு பேசி சோழபுரத்தின் புகழை நிலைநாட்டி நிற்கிறது. நாயக்கர் கால வாமனக் கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல் நடைக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
சேலம்
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion