மதுரையில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின் போது இன்ஜின் மோதி வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி !
மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற இன்ஜின் சோதனை ஓட்டத்தின் போது இன்ஜின்மோதி வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி - இருப்புப்பாதை காவல்துறையினர் விசாரணை.
சக பணியாளரை காப்பாற்ற முயன்று பரிதாபமாக உயிரிழந்த வடமாநில தொழிலாளர்.
ரயில் சோதனை ஓட்டம்
மதுரை மாவட்டம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளியங்குளம் மேம்பாலம் கீழ் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்வதற்கான ரயில் இன்ஜினின் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது புளியங்குளம் அருகேயுள்ள சிலார்ஷா நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்ற போது அதனை பார்த்த, இன்ஜின் பைலட் ஒலி எழுப்பியுள்ளார். அப்போது நொடிப்பொழுதில் இருவர் மீதும் இன்ஜின் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்ஜின் பைலட் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சிலைமான் காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
வடமாநில தொழிலாளர்கள்
இதில் விபத்தில் உயிரிழந்த இருவரும் புளியங்குளம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டுவந்த உத்திரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதியை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களான மதுசூதன் ப்ராஜபதி (30) மற்றும் க்யானந்த பிரதாப் கௌத் (22) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரது உடலையும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக சிலைமான் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர். விபத்தில் உயிரிழந்த இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் தனியார்பள்ளி ஒன்றில் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக தனது நண்பர்களுடன் வந்து ஒரு மாதம் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மதுசூதனன் ப்ராஜபதி நடந்துகொண்டிருந்தபோது இன்ஜின் வந்தபோது தடுமாறிய நிலையில் அவரை கைப்பிடித்து காப்பற்ற க்யானந்த பிரதாப்பும் முயன்றபோது இருவர்மீது மோதி உயிரழந்தது தெரியவந்துள்ளது.
நண்பர் உயிரிழந்த சோகம்
நண்பனை காப்பற்ற சென்றவரும் ரயில் இன்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் இருவருடன் பணிபுரிந்த சக பணியாளர்களிடயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பணிக்ககாக தங்கியிருந்த பள்ளியின் அருகே தங்களுடன் பணிபுரிந்த இருவரும் ரயில்மோதி உயிரிழந்த சம்பவம் தெரியாமல் இருந்த சக பணியாளர்களுக்கு காவல்துறையினர் வந்த பின்பே உயிரிழந்தது தெரிந்ததாக கூறினா். இந்த விபத்து தொடர்பாக இருப்புப்பாதை காவல்துறையினரும் சம்பவ இடத்தில் நேரில்வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம்! வரிந்துகட்டிக்கொண்டு வந்த ஊர்மக்கள்! ஆர்.பி உதயகுமார் ஆதரவு
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kanakkanpatti Railway Station: ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படம் எடுக்கப்பட்ட ரயில் நிலையம் - செயல்பாட்டுக்கு வருமா?