Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Pongal Gift 2026 Tamil Nadu: தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொங்கல் பரிசுகா ரூ.3000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டம்
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தை மாதத்தின் தொடக்கத்தில் தொடர்ந்து 4 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது, சூரியன், இயற்கை, மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து புதுப் பானையில் பொங்கலிட்டு தமிழக மக்கள் மகிழ்வார்கள். அந்த வகையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் உற்சாகமாக கொண்டாடிடும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொங்கல் பரிசாக ரொக்கப்பணமாக 3,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு ரூ. 3000 - யாருக்கெல்லாம் கிடைக்கும்.?
இதனையடுத்து 2 கோடியே 22 லட்சத்து 91ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959/- செலவில் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு வேட்டி, 1 கோடியே 77 லட்சத்து 64ஆயிரம் பேருக்கு சேலை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. அதேநேரம் பொங்கல் பரிசானது சக்கரை அட்டை, பொருட்கள் இல்லாத அட்டைகளுக்கு வழங்கபடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் வருகிற 8ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளார். அதே நேரம் மற்ற மாவட்டங்களில் வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக ரேஷன்கடைகளுக்கு முக்கிய சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு- ரேஷன்கடைகளுக்கு முக்கிய உத்தரவு
குடும்ப அட்டைதாரர்களுக்குச் சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் மேற்கொள்ள குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு, தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும். முதல் நாள் முற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிற்பகல் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட ஏதுவாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும். இரண்டாம் நாள் முதல் தினந்தோறும் முற்பகல் 150 முதல் 200 பேர் வரை மற்றும் பிற்பகல் 150 முதல் 200 பேர் வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்திட டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எழக்கூடிய நியாயவிலைக்கடைகள், அதிக கூட்ட நெரிசல் ஏற்படக் கூடிய நியாயவிலைக்கடைகள் போன்ற கடைகளின் பட்டியல்கள் முன் கூட்டியே தயார் செய்யப்பட்டு போதிய காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





















