T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup IND Ban: டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணிக்கான போட்டிகளை இந்தியாவில் இருந்து மாற்ற, ஐசிசி நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

T20 World Cup IND Ban: வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க, இந்தியாவிற்கு வரமாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா வர வங்கதேசம் மறுப்பு:
வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் 20 அணிகள் பங்கேற்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியானது, இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. அதில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேச அணி, தனது நான்கு லீக் சுற்று போட்டிகளையும் இந்தியாவில் விளையாடவே பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், தாகாவில் நடந்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் அவசர ஆலோசனையின் முடிவில், ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக வங்கதேச அணி இந்தியாவிற்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், “தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்த வளர்ந்து வரும் கவலைகள் குறித்து முழுமையான மதிப்பீட்டைத் தொடர்ந்து, வங்கதேச அரசாங்கத்தின் ஆலோசனையைக் கருத்தில் கொண்டு” இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி பரிசீலனை:
வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “தங்கள் டி20 உலகக் கோப்பை 2026 லீக் சுற்று போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுமாறும்” கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஐசிசி இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், வங்கதேசத்திற்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்றுவதில் பெரிய அளவில் தயக்கம் காட்டாது என கூறப்படுகிறது. அதன்படி, விரைவில் அமித் ஷா தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து விரைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
இன்னொரு பாகிஸ்தானாக மாறி வரும் வங்கதேசம்?
தீவிரவாத நடவடிக்கைகள், எல்லையில் அத்துமீறி தாக்குதல் போன்ற காரணங்களால், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானிற்கு செல்வதை தவிர்த்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற பகல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி அளித்த பிறகு, பாகிஸ்தானும் இந்தியாவிற்கு வர மறுத்துள்ளதோடு, ஐசிசி தொடருக்கான போட்டிகளில் பொதுவான இடங்களில் மோத ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த வகையில் 2026ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகளை கூட இலங்கையில் தான் விளையாட உள்ளது. இந்நிலையில் தான், வங்கதேச அணியும் இந்தியா வர மறுப்பு தெரிவித்துள்ளது. இந்துக்களின் மீதான தாக்குதலில் ஏற்கனவே இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான அரசியல் ரீதியான உறவும் மோசமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரச்னை என்ன?
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களில் இந்தியாவிற்கு எதிராக பேசி வந்த மாணவரணி தலைவர் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு இந்தியா தான் காரணம் என கூறி, உள்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு எதிராக வங்கதேசத்தில் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. இரண்டு பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். இதனால் அதிகரித்த பதற்றத்தால், ஐபிஎல் போட்டிகளில் வங்கதேச வீரர்கள் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து பிசிசிஐ அறிவுறுத்தலின்படி, கொல்கத்தா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முஸ்தஃபிசுர் ரஹ்மான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், தங்களது வீரர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டியுள்ளது.




















