உஷார்..! சாலையோர சிறு வியாபாரிகளை குறி வைக்கும் கள்ள நோட்டு கும்பல்.. தேனியில் அதிர்ச்சி!
தேனி மாவட்டம் கம்பம் அருகே ராயப்பன்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 20 லட்சத்திற்கும் மேலாக கள்ள நோட்டு வைத்திருந்தவர்கள் இருவர் கைது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன் பட்டியில் கள்ளநோட்டுகளுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உத்தமபாளையம் டிஎஸ்பி உமாதேவி உத்தரவின்பேரில் எஸ்ஐ மாயன், சிறப்பு எஸ்ஐ மணி கண்டன், ஏட்டு அழகுதுரை மற்றும் சுந்தரபாண்டி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். ஆனைமலையன்பட்டி, வெள்ளைக்கரடு பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் அருகே, இரண்டு பேர் சந்தேகப்படும்படி நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்களது பையை சோதனை செய்ததில் ரூ.2000, 500, 100 என கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.
அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர்கள் கம்பம் டிடிவி. தினகரன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் 42 வயதாகும் கண்ணன், ஆனைமலை யன்பட்டியைச் சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் 43 வயதாகும் அலெக்சாண்டர் என தெரிந்தது. கள்ள நோட்டுகள் எங்கிருந்து வந்தது, கேரளாவில் சமீபத்தில் கள்ள நோட்டு கும்பல் ஒன்று சிக்கியது, அவர்களுடன் தொடர்பில் உள்ளார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அலெக்சாண்டர், கண்ணனை கைது செய்தனர்.
கம்பம்மெட்டு கும்பலுடன் தொடர்பு?
கடந்த ஜனவரியில் கம்பம்மெட்டில் ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகள் சிக்கியது தொடர்பாக கோவையைச் சேர்ந்த 2 பேர், உத்தமபாளையம், சின்னமனூர், கம்பத்தை சேர்ந்த தலா ஒருவர் என 5 பேர் சிக்கி கைதாகினர். இவர்கள் சமீபத்தில் ஜாமீனில் வந்தனர். இவர்களை குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய ஆம்னி பஸ் டிரைவர் அலெக்சாண்டர் நடவடிக்கையில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்நிலையில், ஆனை மலையன்பட்டி அருகே ஆட்டோ டிரைவர் கண்ணனுடன் இவர் சிக்கியுள்ளார். இவர்களிடமிருந்து ரூ.20,2,450 பறிமுதல் செய்யபட்டுள்ளது.
கள்ளநோட்டு கும்பல் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து செயல்படுவதாக கூறப்படுகிறது. இவர்கள் பெரிய வியாபாரிகள். இரட்டிப்பு பணத்திற்கு ஆசைப்படும் அப்பாவிகள், சிறு வியாபாரிகள், வயதானவர்களை குறிவைத்து கள்ளநோட்டுகளை மாற்றுகின்றனர். சாலையோர சில்லரை வியாபாரிகள், தலைச்சுமை வியாபாரிகள் மற்றும் அதிக கூட்டம் உள்ள கடைகளை குறிவைத்து ரூ.100, 500, 2000 என கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர். கஞ்சா வியாபாரிகளிடமும் கள்ளநோட்டு கும்பல் கைவரிசையை காட்டியுள்ளனர். கள்ளநோட்டுகளை வாங்கிய அவர்கள் வெளியே சொல்ல முடியாமல் மறைத்துள்ளனர். அமாவாசை தினத்தன்று பணம் இரட்டிப்பாக மாறும் என கூறி ஒரிஜினல் நோட்டு கொடுத்து, இவர்களிடம் கள்ளநோட்டை வாங்கியவர்களும் ஏமாந்து போய் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X