(Source: ECI/ABP News/ABP Majha)
கொளுத்தும் கோடை வெயில்...! குளுகுளு கொடைக்கானலுக்கு குவியும் சுற்றுலா பயணிகள்
கோடைகால சூழலை அனுபவிக்க கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள். கடுமையான போக்குவரத்து நெரிசலில் கொடைக்கானல் மலைவழிச்சாலை.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாட்களில் கோடைவாழிட சுற்றுலா தளங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க, சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அதன்படி வாரவிடுமுறையான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நண்பர்கள், குடும்பத்துடன் வருகை தந்த சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர்பாயிண்ட், பைன்மரக்காடுகள், தூண்பாறை உள்ளிட்ட இடங்களை கண்டுகளித்தனர்.
IPL 2022: ஸ்டெம்பிங் டூ டாஸ் உளறல் - ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் வைரலான டாப் 5 தருணங்கள் ... !
இதனிடையே சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், நேற்று பிற்பகல் 2 மணி முதல் சுமார் அரை மணி நேரம் நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் நனைந்தபடி பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். குறிப்பாக சாரல் மழை தூறிய நிலையில், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் ஆனந்தம் அடைந்தனர். மழையை தொடர்ந்து இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. மாறுபட்ட இந்த சூழ்நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகளால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேநேரத்தில் கொடைக்கானலின் நுழைவு வாயிலான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நகராட்சி வசூல் மையம் உள்ளது. சுற்றுலா பயணிகள் படையெடுப்பால் நேற்று இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. எனவே உரிய நேரத்தில், சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் பரிதவித்தனர். கொடைக்கானல் நுழைவு வாயில் சோதனைச்சாவடியில் 2 பாதைகள் உள்ளன. இதில், ஒரு பாதை வழியாக செல்வதற்கே வாகனங்களுக்கு அனுமதித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதுமட்டுமின்றி பிளாஸ்டிக் பாட்டில்கள் சோதனை என்ற பெயரில், வாகனங்களை நிறுத்தி சுகாதார ஊழியர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக சுற்றுலா பயணிகள் புலம்புகின்றனர். கொடைக்கானலில் சீசன் தொடங்கி உள்ள நிலையில், வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சோதனைச்சாவடியில் 2 பாதைகள் வழியாக வாகனங்கள் செல்ல நகராட்சி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இதேபோல் கூடுதல் போலீசாரை பணிக்கு அமர்த்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆன்லைன் பண மோசடி தொடர்பான புகார்களை 1930 என்ற எண்ணில் அளிக்கலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்