மேலும் அறிய
திருப்பரங்குன்றம் மலை: ஆடு, கோழி பலிக்கு தடை கோரிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வருமா?
திருப்பரங்குன்றம் மலை எவ்வாறு அழைக்கப்பட வேண்டும், ஆடு கோழி பலியிடலாமா என்ற உரிமை குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது.

மதுரைக் கிளை
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு,கோழி பலியிட தடைகோரிய மனுமீதான 3 வது நீதிபதியின் விசாரணை நிறைவு, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு,கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக்கோரியும் திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை விதிக்கக்கோரி ராமலிங்கமும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்கவும், மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கவும் கோரி பரசிவம் என்பவரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதேபோல் சிக்கந்தர் தர்கா பகுதியில் பாராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி கோரி சிக்கந்தர் தர்காவின் முதுநிலை மேலாண்மை அறங்காவலர் ஒசிர்கானும், சிக்கந்தர் தர்காவுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக சாலை, விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தக்கோரி அப்துல்ஜப்பார் என்பவரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
6 மனுக்கள் தள்ளுபடி
திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக்கோரி சுவஸ்தி ஸ்ரீ லெட்சுமிசேனா பட்டாச்சர்ய மகா சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த 6 மனுக்களையும் நீதிபதிகள் நிஷாபாஷ, ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். நீதிபதி ஜெ.நிஷாபானு, திருப்பரங்குன்றத்தில் அமைதி நிலவ வேண்டும். மத நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும். இதை சீர் குலைக்க நினைக்கும் நபர்கள், அமைப்புகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு 6 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை
நீதிபதி ஸ்ரீமதி, "திருப்பரங்குன்றம் மாலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும், நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சோலை கண்ணன், ராமலிங்கம், பரமசிவம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்டார். திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கவும், தர்காவுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக சாலை, மின் விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி செய்யக்கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தார். தர்காவில் புனரமைப்பு பணி மேற்கொள்ள தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுடன் தர்கா நிர்வாகத்தின் மனு முடித்து வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியிருப்பதால் 3வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக, நீதிபதி விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
வேற்றுமையில் ஒற்றுமை
திருப்பரங்குன்றம் வழக்கை கடந்த சில வாரங்களுக்கு முன் நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், ரவீந்திரன் ஆஜராகி வாதிடுகையில், சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கான வருவாய் துறை ஆவணங்கள் தாக்கல் செய்தார். மேலும் நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவது எந்த ஆட்சியபனையும் இல்லை அதேபோல் தர்காவுக்கு உட்பட்ட பகுதியில் ஆடு கோழி பலியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும் ஒருவரின் மத வழிபாட்டில் மற்றொருவர் தலையிட முடியாது இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என வாதிட்டு வருவாய் துறை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து வாதிட்டார்.
கல்வெட்டுகள்
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள்ஙகூறுகையில், 2500 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இஸ்லாம் 700 ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழ்நாட்டிற்கு வந்தது. திருப்பரங்குன்றம் மலையில் தர்கா 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டுகளில் தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சங்க இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் மலை குறித்து கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில், ஆடு கோழி பலியிடுவது வழக்கம் இல்லை. ஆடு கோழி பலியிடுவது கட்டாய மான, தேவையான பழக்கவழக்கம் இல்லை.
இந்த பழக்கவழக்கம் இருந்ததை நிரூபிக்க வேண்டும். மேலும் உரிமையியல் நீதிமன்றம், பிரிவியூ கவுன்சில் உத்தரவுகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து சமணர்கள் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலையில் சமண கல்வெட்டுக்கள் உள்ளது. தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளது. தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என வாதிட்டார்.
வழக்கு ஒத்திவைப்பு
இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திருப்பரங்குன்றம் மலை எவ்வாறு அழைக்கப்பட வேண்டும், ஆடு கோழி பலியிடலாமா என்ற உரிமை குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்த நீதிபதிகள் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















