திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா.. தெப்ப உற்சவம்.. திரளான பக்தர்கள் தரிசனம்
மாசி திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா11ம் திருவிழா தெப்ப உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆண்டுதோறும் நடைபெற கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசிதிருவிழா கடந்த 25ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கின்றது. ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் அருள்பாலித்தார். மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி அளித்தார்.
எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சண்முகரை அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் எழுந்தருளினார்.
காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே" என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். 9ஆம் திருநாளான இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மாசி திருவிழாவின் 10-ஆம் திருநாளன்று 6.30 மணியளவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக நான்கு வெளி வீதிகளில் பவனி வந்தரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாசி திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அலைகடலென திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தெப்ப உற்சவ திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 6மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தில் 11சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.