Tiruchendur: நேற்று திடீரென 100 மீ உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. நடந்தது என்ன?
நேற்று காலை திடீரென திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடையே சுமார் 100 அடிக்கு கடல்நீர் உள்வாங்கியது.
முருகனின் அறுபடை வீடுகளுள் இரண்டாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அருகிலேயே கடல் இருப்பதால் புனித நீராடிவிட்டு கோயிலுக்குள் சென்று முருகப்பெருமானை தரிசிப்பர்.
இந்தநிலையில், நேற்று காலை திடீரென திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடையே சுமார் 100 அடிக்கு கடல்நீர் உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த பாசி படிந்த பாறைகள் வெளியே நன்றாக தெரிந்தது. இதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆர்வத்துடன் புகைப்படத்தை எடுத்துகொண்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. கடல்நீர் உள்வாங்கினாலும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் வழக்கம்போல், கடலில் புனித நீராடி, கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இப்படியான சூழலில் மாலை வழக்கம்போல் கடல் இயல்புநிலைக்கு திரும்பியது.
கடல்நீர் உள்வாங்க காரணம் இதுதானா..?
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே உள்ளே கடலானது அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் நவமி போன்ற காலங்களில் கடல்நீர் உள்வாங்குவதாக கூறப்படுகிறது. இவை பெரும்பாலும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாட்கள் என்பதால் இந்த நாட்களுக்கு முந்தைய நாட்கள் அல்லது பிந்தைய நாட்களில் காலை நேரங்களில் கடல்நீர் உள்வாங்கும். அதே வேளையில், மாலை இயல்பு நிலைக்கு திரும்பும். கடந்த 5ம் தேதி பௌர்ணமி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் பற்றி வரலாறு சொல்லும் கதை:
முருகப்பெருமானது அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலை 1648 ம் ஆண்டு டச்சுப்படையினர் கைப்பற்றினார்கள். இதனை மீட்க மன்னர் திருமலை நாயக்கர் எதிர்த்து போராடியும் வெற்றி வெற முடியவில்லை.
இதையடுத்து, கோயிலை கைப்பற்றிய டச்சுக்காரர்கள் சண்முகர், நடராஜர் இரு உற்சவ மூர்த்திகளையும் எடுத்து கொண்டு மீண்டும் கடல் வழியே பயணத்தை தொடர்ந்தனர். அப்போது, கடலிலேயே உற்சவ மூர்த்தி சிலைகளை உருக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட போது கடலில் திடீரென ஏற்பட்ட மாற்றம்,கடும் சூறாவளியால் கப்பல் நிலை தடுமாறியது. இதனை கண்டு அஞ்சிய டச்சுக்காரர்கள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்து இரண்டு உற்சவ மூர்த்தி சிலைகளையும் கடலில் விட்டனர். சரியாக அந்த நேரத்தில் கடலின் சீற்றமும் காற்றின் வேகமும் தணிந்தது. இதனை கண்டு வியப்புற்ற டச்சுக்காரர்கள் தங்களது டச்சு நாட்டின் ராணுவ குறிப்பில் வரலாற்று ஆவணமாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் நடைபெற்று சரியாக 5 ஆண்டு கடந்த பின்பு உற்சவ மூர்த்தியை மீண்டும் உருவாக்கும் பணி கோயிலில் துவங்கப்பட்டது. அச்சமயத்தில் வடமைலயப்பர் என்ற பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி உற்சவ மூர்த்தி கடலில் இருக்கும் இடத்தை காண்பித்து அடையாளமாக எலுமிச்சை பழமும், கருடப்பறவையும் தோன்றும் என உத்தரவு கொடுத்துள்ளார். வடமலையப்பர் கடலில் தேடத்துவங்கியபோது குறிப்பிட்ட தூரத்தில் கருடன் வட்டமிடுவதை கண்டனர். அந்த இடத்தில் வேகமாக சென்று பார்த்தபோது எலுமிச்சை பழம் மிதந்ததை கண்டவுடன் கடலுக்குள் நீந்தி சென்று உற்சவ மூர்த்திகளை வெளியே கொண்டு வந்து திருச்செந்தூர் கோயிலில் சண்முகரையும் நடராஜரையும் மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
இதன் காரணமாக, இக்கோயிலின் சண்முகர் கடலில் கண்டெடுக்கபட்ட நாளான தை மாதம் 4 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.