(Source: ECI/ABP News/ABP Majha)
"இது திராவிட மாடல் அரசு, முத்துவேல் கருணாநிதி மாடல் அரசு" : முதலமைச்சர் ஸ்டாலின் உரை..
கடிகாரத்தை விட வேகமாக உழைத்து கொண்டு இருக்கிறேன். அவதூறு விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இது திராவிட மாடல் அரசு,
கடிகாரத்தை விட வேகமாக உழைத்துக்கொண்டு இருக்கிறேன். அவதூறு விமர்சனங்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை இது திராவிட மாடல் அரசு, முத்துவேல் கருணாநிதி மாடல் அரசு என தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் பேசியுள்ளார்
தேனி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் புறவழிச்சாலையில் இன்று நடந்தது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தேனி மாவட்டத்துக்கு வந்தார். வைகை அணை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் அவர் தங்கினார். இன்று காலை விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தேனியில் விழா நடக்கும் இடத்துக்கு வந்தார். விழா பந்தல் வரை வேனில் வந்து இறங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டதும் மக்கள் வரவேற்பு கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அங்கு திரண்டு நின்ற மக்களை பார்த்து அவர் கையசைத்தார். பின்னர் மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் அவர் நடந்து சென்றார். அங்கு மக்கள் ஆர்வத்தோடு அவரிடம் கைகுலுக்க வந்தனர். அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கினார். பின்னர் விழா மேடையில் ஏறி, மக்களை பார்த்து கும்பிட்டார்.
பின்னர் தேனி மாவட்டத்தில் ரூ.114.21 கோடி மதிப்பில் முடிவுற்ற 40 திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.74.21 கோடி மதிப்பில் 102 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து விழாவில் முதல்-அமைச்சர் பேசும்போது, "நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று மே 7-ஆம் தேதி ஓராண்டு நிறைவு பெறுகிறது. தேனிக்கு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்துள்ளேன். தேனி மாவட்டத்தை கருணாநிதி உருவாக்கினார். தேனி கலெக்டர் அலுவலகத்தை கருணாநிதிதான் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரு நல்ல ஆட்சியின் இலக்கணம். இது மக்களுக்கான அரசு. இதை தான் திராவிட மாடல் அரசு என்று பெருமையோடு சொல்கிறோம். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். அதுதான் என்னுடைய மாடல். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல். அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு சேரும் வகையில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம். '
தேர்தல் வாக்குறுதிகளை நான் முழுமையாக நிறைவேற்றி விட்டேன் எனக் கூற மாட்டேன். மீதமுள்ள 5% 10% வாக்குறுதிகளை நான் கண்டிப்பாக படிப்படியாக நிறைவேற்றுவேன். அவதூறு விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லி எனது நேரத்தை வீணாக்க மாட்டேன். கடிகாரத்தை விட வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறேன். தந்தையின் பிறந்த நாளைஅரசு விழாவாக அறிவிக்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்துள்ளதாகவும், நல்ல நாகரிக அரசியலை உருவாக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் அனைத்திலும் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தனது கனவாக இருக்கிறது” என ஸ்டாலின் பேசினார்.