18 வயது பூர்த்தி அடைந்த பின்னரே பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் - பெற்றோர்களுக்கு ஆட்சியர் அட்வைஸ்
அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், சோலையூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக அரசுத்துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலுவலர்களை சந்தித்து மனுக்களை வழங்கி வரும் நிலையினை மாற்றி, மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு கிராமத்தினை தேர்ந்தெடுத்து அனைத்து துறை அலுவலர்களும் மக்களை தேடி, நேரில் சென்று அங்கு பொதுமக்களை சந்தித்து, ஒவ்வொரு இடத்திலும் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வுகாணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.
அரசு மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் பிரிவுகளில் உயர்கல்வி பயில்வதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளிப்படிப்பை முடித்த மாணவ, மாணவியர்கள் முழுமையாக உயர் கல்வி பயில்வதற்கு வங்கி கடனுதவி உட்பட அனைத்து நடவடிக்கைகளும் கல்வித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வருகிறது. இதனை தவிர்க்க நாம் வசிக்கும் இடத்தையும், சுற்றுச்சூழலையும் சுகாதாரமான முறையிலும், தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.
குழந்தை திருமணம், சிறுவயதில் கர்ப்பம் அடைதல், அதனால் குறைவான எடையில் குழந்தை பெற்றெடுத்தல் போன்றவற்றை தடுப்பதன் மூலமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க இயலும். எனவே, அரசு நிர்ணயித்துள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பின்னரே, பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் உறுதி கொள்ள வேண்டும்.
மேலும், அனைவரும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வைத்திருப்பது அவசியமாகிறது. தங்களது குடும்ப உறுப்பினர்களில் எவருக்கேனும் மருத்துவ மேல் கிசிக்சை தேவைப்படும் பொழுது முன்பணமின்றி இத்திட்டத்தின் மூலமாக தரமான சிகிச்சை பெற முடியும். இன்றைய தினம் நடைபெறும் முகாமில் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்கு இப்பகுதி மக்கள் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்படும்.
வருவாய்துறையின் சார்பில் இலவச வீட்டுமனை ஒப்படை 06 நபர்களுக்கும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் 3 நபர்களுக்கும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு மருந்து பெட்டகமும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பண்ணைக்கருவி தொகுப்பு மற்றும் உயிர் உரங்கள் 2 நபர்களுக்கும்,
தோட்டக்கலைத்துறையின் சார்பில் பழச்செடி தொகுப்பு 2 நபர்களுக்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுயதொழில் தொடங்க 2 நபர்களுக்கு நிதியுதவியும், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பிலான காப்பீடு அட்டைகள் 22 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திறன்பேசி 2 நபர்களுக்கும் மற்றும் இணையவழி சான்றிதழ் 12 நபர்களுக்கும் என பல்வேறு திட்டங்கள் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வாழ்வில் வளம் பெற வேண்டும். இவ்வாறு ஆட்சித்தலைவர் பேசினார்.