வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கும் கிராம மக்கள்!
சோதனை சாவடியை கடந்து அனைவரும் மேகமலை பகுதிகளுக்குள் செல்ல வேண்டும் , இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளதால் இந்த சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள பிரபலமான அறிவிக்கப்படாத சுற்றுலாத் தலமாக விளங்குவது மேகமலை. இந்த பகுதியில் மேகமலை ,இரவங்கலாறு ,மகாராஜாமெட்டு, வெள்ளிமலை உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து வருகிறது. இந்த கிராமங்களில் இருக்கும் மேகமலை வனப்பகுதி தமிழ்நாட்டின் இரண்டாவது பாதுகாக்கப்பட்ட புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேகமலை வனப்பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வனத்துறையினர் இந்த மேகமலை வனப்பகுதியை முழு கவனம் செலுத்தி பாதுகாத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவிவருவதன் எதிரொலியாக கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருந்தன. இன்னிலையில் மேகமலை பகுதிகளுக்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சின்னமனூரில் இருந்து மேகமலை செல்லும் கீழ் பழனி என்னும் பகுதியில் வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி உள்ளது.
இந்த சோதனை சாவடியை கடந்து அனைவரும் மேகமலை பகுதிகளுக்குள் செல்ல வேண்டும் , இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளதால் இந்த சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மேகமலை பகுதிகளில் உள்ள சுமார் 8 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கு பெரும்பாலும் மேகமலையில் இருந்து இந்த வன சோதனை சாவடியை கடந்து சின்னமனூர் நகர்ப்பகுதிகளில் வந்து தங்களுக்குத் தேவையான அடிப்படை அத்தியாவசிய தேவையான பொருட்களை வாங்கிச் செல்வர்.
இந்நிலையில் வனத்துறையின் கடும் கட்டுப்பாடுகளால் மேகமலையில் இருந்து கீழே வரும் கிராம மக்களுக்கு அவ்வப்போது அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் மேகமலைக்கு செல்லும் அரசு பேருந்துகள் வருவதற்கு காலதாமதமான நிலையில் மேகமலையில் இருந்து சின்னமனூர் நகர் பகுதிக்கு வருபவர்கள் மீண்டும் திரும்பி தங்களது இருப்பிடத்திற்கு செல்வதற்கு கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த வனப்பகுதிகளில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தாலும் இப்பகுதி கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடிப்படை தேவையான பொருட்களை வாங்குவதற்கு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாகவும், அதற்கு மாற்று வழிகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.