தேனி : ஊருக்குள் அதிகரித்த காட்டு யானைகளின் நடமாட்டம் : அச்சத்தில் கிராம மக்கள்..
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், விளை நிலங்களை சேதப்படுத்தியும் , பொதுமக்களை அச்சுறுத்தியும் வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது தேனி மாவட்டம். போடி, கம்பம், கூடலூர், தேவாரம், கோம்பை, குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர்கேம்ப் என மலையடிவாரங்களை ஒட்டியுள்ள கிராம பகுதிகள் அதிகமாக உள்ள மாவட்டமாகும். வனப்பகுதிகளில் உள்ள காட்டு விலங்குகளான மான், யானை போன்ற விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலையடிவார பகுதிகளில் அதிகமாக வருவதை தடுப்பதற்காக வனத்துறையினரால் மலையடிவார வனப்பகுதியை ஒட்டி சோலார் மின்வேலிகள், அகழிகள் வெட்டப்பட்டு உள்ளது. பல இடங்களில் சோலார் மின்வேலிகள் அறுந்து கிடப்பதும் , அகழிகள் பராமரிப்பிலாமல் இருப்பதால் சமீப காலமாக காட்டு விலங்குகள் மலையடிவார பகுதிகளில் இறங்க தொடங்கியுள்ளது.
போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான தேவாரம் பகுதியில் ஒற்றை காட்டுயானை உட்பட காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். தேவாரம் பகுதியில் மட்டும் காட்டு யானையால் இந்த வருடத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் அருகே உள்ள பழியங்குடி பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு புகார் தெரிவித்திருந்த நிலையில். கூடலூர் அருகே உள்ள மின் நிலையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, லோயர்கேம்ப் போன்ற மலையடிவார பகுதிகளை ஒட்டி காட்டு விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய நிலையில் விளைநில பயிர்களையும் சேதப்படுத்துவதாகவும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
அதே போல் கூடலூர் அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள சுருளியாறு மின் நிலையம் பகுதியில் 70 குடும்பங்களுக்கு மேலாக மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் மட்டுமே யானைகளின் அட்டகாசம் இருந்து வந்தது. இரவில் குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானைகள் அதிகாலை நேரத்தில் வனப்பகுதிக்குள் மீண்டும் சென்று விடும் நிலையில், தற்போது பகல் நேரத்திலும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் சுருளியாறு மின் நிலையம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரை கூட்டமாக வந்த யானைகள் தாக்க முயன்றதும் நடந்துள்ளது.
இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கம்பம் நோக்கி செல்ல இருந்த அரசு பேருந்தை காட்டுயானைகள் வழி மறித்ததால் அந்த பேருந்து கம்பம் செல்லாமல் மின்நிலைய பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. காட்டு விலங்குகள் வராமல் அமைக்கப்பட்ட மின் வேலிகள் ஆங்காங்கே அறுந்து கிடப்பதாலும், அகழிகள் பராமரிப்பில்லாமல் இருப்பதாலும் இது போன்ற காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே காட்டு விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.
தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் ,
Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!