தேனியில் தொடர் மழை எதிரொலி - முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியாக உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை அதிகரிப்பால் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரன்கங்ள் மற்றும் வனப்பகுதிகளில் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரம் : முல்லை பெரியாறு அணை, 142 அடி உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் தற்போது 127.60 அடி வரை தண்ணீர் உள்ளது. அணையின் கொள்ளளவு 4180 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு வரும் நீரின் அளவு 725 கன அடியாகவும் உள்ள நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின் நீரைக்கொண்டு கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 14,707 ஏக்கரில் விவசாயிகள் இரு போக நெல் சாகுபடி பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
மேலும் முல்லை பெரியாறு அணை நீரானதுமதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் வருடந்தோறும் இரண்டு போக நெல் சாகுபடி செய்து வருவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் போக சாகுபடிக்காக ஜூன் 1ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பதும் வழக்கமாக உள்ள நிலையில் அடிக்கடி ஏற்படும் மழையின்மை, பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தண்ணீர் திறப்பில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு நீர்மட்டம் குறைவால் ஒன்றரை மாதம் தாமதமாக ஜூலை 14ஆம் தேதி முதல் போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நீர்மட்டம் 119.20 அடியாக இருந்தது. 2017ஆம் ஆண்டு மூன்று மாதங்கள் தாமதமாக செப்டம்பர் 25ஆம் தேதியும் 2018ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதியும், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதியும், 2020 ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டுகளில் இரு போக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடியவில்லை. அதேவேளையில் கடந்த ஆண்டு நீர்மட்டம் பொதுமானதாக இல்லாமல் (130.90) இருந்ததால் ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இரு போக நெல் சாகுபடியையும் முழுமையாக செய்ய முடிந்தது. இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்த நிலையிலும் கடந்த 5 நாட்களாக நீர்ப்பிடிப்பில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இதனால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து 127 அடியை எட்டியுள்ளது. மேலும் இரு நாட்களுக்கு மழை பெய்யும் நிலை உள்ளதால் நீர்மட்டம் உயரும். இந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே இருபோக சாகுபடியை தண்ணீர் பற்றாக்குறை இன்றி செய்ய முடியும். முந்தைய ஆண்டுகளில் பலமுறை பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மழை மற்றும் அணை நீர்மட்டம் போதுமானதாக இருப்பதால் தேனி மவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்