ஊரணியில் குளிக்க சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்
பெரியகுளம் அருகே ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் வடுகபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் அருகே ஊரணியில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு பள்ளி மாணவர்களை காணவில்லை என நேற்று இரவு 11 மணி வரை தீயணைப்புத்துறையினர் ஊரணியில் தேடிய நிலையில் சிறுவர்களின் உடல் கிடைக்காததாலும் மேலும் இரு சிறுவர்கள் ஊரணியில் குளித்தார்களா? என்ற சந்தேகம் இருந்ததால் தேடுதலை ஊர் மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் கைவிட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் தென்றல் (11) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சௌந்தரபாண்டியன்(11) ஆகிய இருவரும் வடுகபட்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மார்க்கண்டேயர் நடுநிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
தென்றல் மற்றும் சௌந்தர பாண்டியன் ஆகிய இருவரும் பள்ளி சென்று வீடு திரும்பிய நிலையில் வடுகபட்டி பகுதியில் உள்ள கட்டையன் ஊரணியில் குளிக்கச் சென்றனர். இந்நிலையில் நீண்ட நேரமாக இருவரும் வீடு திரும்பாத நிலையில் இரு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வடுகபட்டி பகுதி முழுவதும் தேடிய நிலையில், ஊரணி பகுதிக்கு சென்றதாக தகவல் கிடைத்ததை அடுத்து, நேற்று இரவு 8 மாணிக்கு பின்பு ஊரணி பகுதியில் இறங்கி தேடிப் பார்த்த பொழுது இரு சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.
மேலும் நீரில் மூழ்கி பலியான இரு சிறுவர்களுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர இரவு ஒன்பது மணி முதல் ஊரணி முழுவதும் தேடிப் பார்த்த பொழுது ஊரணியில் மேலும் இரு சிறுவர்களின் உடல் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் இரு சிறுவர்கள் தான் வந்ததாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேடும் பணியில் இருந்த தீயணைப்புத் துறையினர் சிறுவர்களின் உடலை தேடும் பணியை கைவிட்டனர்.
மேலும் நீரில் மூழ்கி பலியான சிறுவர்களின் உடலை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தென்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் வடுகபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.