சபரிமலை சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம் - கார் விபத்தில் சிறுவன் உயிரிழப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சொந்த ஊர் திரும்பிய ஐயப்ப பக்தர்களின் கார் கம்பம் புறவழிச் சாலையில் விபத்துக்குள்ளானதில் எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு. நான்கு பேர் படுகாயம்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் துவங்கியதை தொடர்ந்து. பல்வேறு பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக அடுத்த மாதம் வரும் மண்டல பூஜைக்கு சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு செல்ல தமிழகத்திலிருந்து பல்வேறு முக்கிய மலை வழிச்சாலைகள் இருந்தாலும், தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்குக் செல்லும் மூன்று முக்கிய வழிகள் தான் தேனி மாவட்டத்தில் உள்ளது.
அதாவது தேனி மாவட்டம் போடி மெட்டிலிருந்து மூணாறு செல்லும் வழியும், கம்பத்திலிருந்து கம்பமெட்டு வழியாகவும், குமுளி வழிச்சாலை என இரண்டு மலை வழிச்சாலையாக செல்லலாம். தென் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் பெரும்பாலும் தேனி மாவட்டத்திலிருந்து கம்பம் வழியாக குமுளி வழியாகவே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். அப்படி செல்லும் வாகனங்களால் பல்வேறு நேரங்களில் வாகன போக்குவரத்து நெரிசலும் சில நேரங்களில் விபத்துக்கள் நடப்பதும் நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் சபரிமலை சீசன் துவங்கியதும் கம்பத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் விபத்துக்கள் நடந்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த சூழலில்தான் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர் தனது மகன் சித்தார்த்துடன் அப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் குழுவினருடன் சபரிமலைக்கு சென்று நேற்று காலை சுவாமி தரிசனம் செய்து விட்டு காரில் குமுளி வழியாக இரவில் சொந்த ஊர் திரும்பி வந்துள்ளார். டிரைவர் கார்த்திக் காரினை ஓட்டி வந்துள்ளார். அப்போது தேனி மாவட்டம் கம்பம் புறவழிச் சாலையில் உள்ள மணிகட்டி ஆலமரம் அருகே எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள சிக்னல் விளக்கில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த காரில் பயணம் செய்த எட்டு வயது சிறுவன் சித்தார்த் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த சிவக்குமார், புவனேஸ்வரன், கார்த்திக் மற்றும் சிறுவனின் தந்தை மஞ்சுநாதன் ஆகிய நான்கு ஐயப்ப பக்தர்களும் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிய கார் விபத்துக்குள்ளாகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.