செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Chembarambakkam Lake: "செம்பரம்பாக்கம் ஏரி 100% நிரம்பியுள்ள நிலையில், ஏரியிலிருந்து 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது"

"செம்பரம்பாக்கம் ஏரி வரலாற்றிலேயே அதிகபட்சமாக 24 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது, மழை முன்னெச்சரிக்கை காரணமாக 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது"
செம்பரம்பாக்கம் ஏரி - Chembarambakkam Lake
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.
வடகிழக்கு பருவ மழையினால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகபடியாக உள்ளதால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்றைய (16.12.2025) பிற்பகல் 12 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவில் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாலும், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும் கடந்த 12.12.2025 அன்று முதல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 250 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது.
500 கன அடி நீர் திறப்பு
தற்போது இன்று (16.12.2025) மாலை 4.00 மணியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடியாக உயர்த்தி உபரி நீர் திறக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஏரிக்கு வரும் கூடுதல் நீர்வரத்து அப்படியே உபரி நீர் கால்வாயில் திறந்து விடப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனூர், குன்றத்துர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளது.





















