மோடியில் பொருளாதார தத்துவத்தால் ஏழைகள் பிச்சைக்காரராக ஆனார்கள்! - திருச்சி சிவா தாக்கு!
கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டங்கள், தீட்டிய திட்டங்கள், நடந்து கொண்ட செயல்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது - திருச்சி சிவா பரப்புரை
தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வனை ஆதரித்து போடியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பிரசாரம் செய்தார். போடி தேவர் சிலை திடலில் அவர் பேசியது, இதுவரை 17 பொதுத் தேர்தல்கள் நடந்துள்ளது. 18 ஆவது பொதுத் தேர்தலில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு பல கேள்விகளுக்கு விடை சொல்லும் தீர்ப்பாக அமைய இருக்கிறது. இந்த தேர்தல் முடிந்தவுடன் இந்திய தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயக நாடாக இருக்குமா அல்லது ஒற்றை தலைமை கொண்ட ஆட்சியாக மாறுமா என்பது தெரியும். பல மொழிகள் பேசி வருகின்ற இந்த நாட்டில் இந்தி மொழி மட்டும்தான் இருக்குமா என்ற கேள்விகள் எல்லாம் நமக்கு முன்னாள் எழுகிறது.கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டங்கள், தீட்டிய திட்டங்கள், நடந்து கொண்ட செயல்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத சட்டங்கள், சிறுபான்மையினரை பாதிக்கும் சட்டங்கள் அரங்கேறியிருக்கின்றன. பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமான ஏழைகளுக்கு எதிரான அரசாகவே பாஜக ஆட்சி நடைபெற்று வந்துள்ளது. நரேந்திர மோடி ஆட்சியின் பொருளாதார தத்துவம் என்பது நடைமுறையில் ஏழைகள் பிச்சைக்காரர்களாக மாறினார்கள். பணக்காரர்கள் சீமான்களாக மாறினார்கள். எல்லா வகையிலும் சீமான்களுக்கு ஆதரவான செயல்களாகவே இருந்தன. நரேந்திர மோடி பொறுப்பேற்ற பத்தாண்டுகளில் இதுவரை 108 தடவைகள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்வதற்கு அடிப்படையில் குரூட் ஆயில் என்ற மூலப்பொருள் தேவை. இந்தியாவில் குரூட் ஆயில் இல்லை.
ரஷ்யா, ஈரான், வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும். குரூட் ஆயில் விலை அதிகமாக விற்கப்படும்போது கூட மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.60-க்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500-க்கும் விற்கப்பட்டது. இன்று குரூட் ஆயில் விலை குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-க்கும், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1000-க்கும் விற்கப்படுகிறது.இப்படி பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மூன்றாண்டுகளில் வரி மட்டும் ஏழேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
அரசாங்க நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் கிடைத்தது நாலரை லட்சம் கோடி. இந்த பணத்தை பெரிய தொழிலதிபர்களுக்கு 10 ஆயிரம் கோடி, 12 ஆயிரம் கோடி கடன் வழங்கி, கடன் வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்கள். வரிப்பணத்தை கொண்டு வழங்கிய கடனை தள்ளுபடி செய்துவிட்டார்கள். விவசாயிகள், மாணவர்கள் போராடினால் பயன் இல்லை.கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக, பாஜகவுக்கு தோல் கொடுத்து பல தேவையற்ற சட்டங்களை கொண்டுவர உதவிவிட்டு இப்போது நாடகமாடுகிறார்கள். இந்த நிலைகள் எல்லாம் மாறவேண்டும் என்றால் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் நீங்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார். பிரசாரத்தின்போது திமுக, காங்கிரஸ்,விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றன.