தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா நீங்கள்..? - உங்களுக்குத்தான் இந்த செய்தி
பொதுமக்கள் தங்கள் குறைகளை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் ரேஷன் கடை நடத்தும் நிறுவன அலுவலர்களுக்கு மனு மூலமும் தெரிவிக்கலாம்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குடும்ப அட்டையில் பெயர் திருத்தம் செய்ய வேண்டுமா? குடும்ப அட்டையில் உங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க வேண்டுமா? அல்லது குடும்ப அட்டையில் (ரேஷன் கார்டில்) பெயரை நீக்க வேண்டுமா? ரேஷனில் பொருட்கள் விநியோகம் தொடர்பான ஏதேனும் குறைகள் உள்ளதா? வேறு மண்டலம் போகிறீர்களா? ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து குறைகளுக்கும் உடனடி தீர்வாக நாளை ஏப்ரல் 12ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார்.

ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் வேண்டும் என்றால் அல்லது ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அந்தந்த தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியதே இல்லை.. முன்பெல்லாம் தாசில்தார் எப்போது வருவார்.. எப்போது மனு கொடுப்பது.. எப்போது மாற்றித்தருவார்கள் என்று மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்.. இப்போது மொபல் ஆப்பிலேயே அத்தனை இதற்கான தீர்வு உள்ளது. ஆன்லைனிலும் குடும்ப உறுப்பினர்களை சேர்க்க முடியும். அதேபோல் குடும்ப உறுப்பினர்களை நீக்கவும் முடியும். வீட்டில் சிலிண்டர் இருந்தாலே ஏரியா விட்டு ஏரியா போனாலும் ரேஷன் கார்டை எந்த ஒரு இசேவை மையத்தில் கொடுத்து ஒரு வாரத்தில் மண்டலத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
ஆனால் ஆன்லைன் செயல்முறைகளை பற்றி தெரியாத சாமானிய மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்காக அரசு ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்தி சேவைகளை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. வெறும் மனுக்களை வாங்கி சரி செய்வதை தாண்டி, குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறதுது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் வரும் 12ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் இதுபற்றி வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், பொதுவினியோக திட்டத்தில் உள்ள குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும், மாதந்தோறும் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகிறது.

அதன்படி, நாளை சனிக்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா பகுதிகளிலும் நடக்கிறது. பெரியகுளம் தாலுகாவில் வடுகபட்டி, தேனி தாலுகாவில் ஊஞ்சாம்பட்டி, ஆண்டிப்பட்டி தாலுகாவில் வாலிப்பாறை, உத்தமபாளையம் தாலுகாவில் கருநாக்கமுத்தன்பட்டி, போடி தாலுகாவில் காமராஜபுரம் ஆகிய இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை மாற்றம் தொடர்பான கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்கலாம். கூட்டத்தில் கொடுக்கப்படும் புகார்கள், குறைபாடுகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் ரேஷன் கடை நடத்தும் நிறுவன அலுவலர்களுக்கு மனு மூலமும் தெரிவிக்கலாம்.
முன்கூட்டியே பெறப்படும் புகார்கள் மற்றும் குறைபாடுகள் வகைபாடு வாரியாக பிரிக்கப்பட்டு, உடனுக்குடன் அவை தீர்வு செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முகாம் நடைபெறும் நாளில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.






















