மேலும் அறிய
Advertisement
வைகை அணை வரலாற்றில் முதன்முறையாக 9 மாதங்களாக தொடர்ந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீர்
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியாகவும் , வைகை அணை நீர் மட்டம் 68.31 அடியாகவும் உள்ளது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இதுதவிர மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் வைகை அணை முக்கிய பங்கு வகிக்கிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் போகம், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அணையில் நீர்இருப்பு அதிகம் இருந்தால் ஒரு போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படும்.
வரலாற்றில் முதன்முறையாக 9 மாதங்களாக திறக்கப்படும் நீர்
வைகை அணை பயன்பாட்டிற்கு வந்த 64 ஆண்டுகளில் ஒரு ஆண்டில் 3 போகத்திற்கும் முழுமையாக தண்ணீர் திறக்கப்பட்டது இல்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணையில் போதுமான அளவு நீர்இருப்பு இருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்தது.
இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை 9 மாதங்களாக ஒருபோகத்திற்கும், அதனை தொடர்ந்து இரண்டாம் போகத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணை வரலாற்றில் தொடர்ந்து 9 மாதங்களாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.
வைகை அணை நீர்மட்டம்
வைகை அணையின் முழு கொள்ளளவு 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில், கடந்த 9 மாதங்களில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக மட்டும் 23 ஆயிரத்து 620 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 9 மாதங்களில் வைகை அணையின் நீர் இருப்பை விட 3 மடங்கு தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 68.31 அடியாகவும், நீர்வரத்து 276 கனஅடியாகவும் இருந்து வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5,397 மில்லியன் கனஅடியாக உள்ளது.
முல்லை பெரியாறு அணை நீர் நிலவரம்
முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழையின் அளவு மிக குறைந்துள்ளதால் அணையின் நீர் இருப்பும், அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டமானது 127.75 (142) அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியாகவும், அணைக்கு வரும் நீரின் அளவு 122 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் 4,212 கன அடி நீர் உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
க்ரைம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion