காரில் உடல் உறுப்புகள் கடத்திய விவகாரம்: மந்திரவாதி உள்பட 4 பேர் கைது - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
காரில் உடல் உறுப்புகள் கடத்திய சம்பவத்தில் மந்திரவாதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் போலீசார் கடந்த 3-ந் தேதி இரவு நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 3 பேர் காருடன் நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் வந்த காரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் ஒரு சூட்கேஸ் பெட்டியில் நாக்கு, மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், காரில் வந்தவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்கள், மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (39), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த டேவிட் பிரதாப்சிங் (40), பசும்பொன்னை சேர்ந்த முருகன் (65) என்பது தெரியவந்தது. உடல் உறுப்புகள் வைத்திருந்ததால் நரபலி கொடுக்கப்பட்டதா? என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து பிடிபட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், உத்தமபாளையத்தை சேர்ந்த மந்திரவாதியான ஜேம்ஸ் (55) என்பவரது பழக்கம் கிடைத்ததாகவும், அவர் மாந்திரீக பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும், கோடீஸ்வரர்களாக மாறிவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறியதாகவும் தெரிவித்தனர். பின்னர் அவர் கூறியதை நம்பிய 3 பேரும், பூஜைகள் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர்.
அப்போது ஜேம்ஸ், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில் தனக்கு தெரிந்தவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அவர் கொடுக்கும் சூட்கேஸ் பெட்டியை திறக்காமல் கொண்டு வரும்படி கூறினார். அதன்படி, 3-ந் தேதி காலை அலெக்ஸ்பாண்டி உள்பட 3 பேரும் வண்டிப்பெரியார் சென்றனர். அங்கு ஜேம்ஸ் கூறிய நபரை சந்தித்து, ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தனர். அதற்கு அவர், ஒரு சூட்கேஸ் பெட்டியை அவர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் அதனை திறக்கக்கூடாது என்று கூறினார். இதையடுத்து அந்த பெட்டியை வாங்கிக்கொண்டு ஜேம்சை சந்திப்பதற்காக உத்தமபாளையத்துக்கு 3 பேரும் வந்தபோது போலீசில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அலெக்ஸ்பாண்டி உள்பட 3 பேரும் கொடுத்த தகவலின்பேரில் ஜேம்ஸ் மற்றும் கேரளாவை சேர்ந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், ஜேம்ஸ், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உத்தமபாளையம் தனிப்படை போலீசார் நேற்று அங்கு விரைந்தனர். அப்போது குற்றாலத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஜேம்ஸ், தனது கூட்டாளிகளான உத்தமபாளையத்தை சேர்ந்த பாண்டி (30), பாவா பக்ருதீன் (42) ஆகியோருடன் இருந்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, உத்தமபாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அதேபோல் ஜேம்சுக்கு உடந்தையாக இருந்த கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரை சேர்ந்த செல்லப்பா என்பவரையும் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் ஜேம்சிடமும், அவருக்கு உடந்தையாக இருந்த 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
ஜேம்ஸ் ஏற்கனவே மாந்திரீக பூஜை செய்து பணம் இரட்டிப்பு மோசடியில் கைது செய்யப்பட்டவர். அதேபோன்று அலெக்ஸ்பாண்டி, டேவிட் பிரதாப்சிங், முருகன் ஆகியோரிடமும் மாந்திரீக பூஜை செய்து பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை ஜேம்ஸ் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் 3 பேரையும் நம்ப வைப்பதற்காக உடல் உறுப்புகளை சூட்கேஸ் பெட்டியில் வைத்து கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஜேம்சுக்கு உடந்தையாக பாண்டி, பாவா பக்ருதீன், செல்லப்பா ஆகியோர் இருந்துள்ளனர். மோசடி செய்து பெறப்பட்ட பணத்தை வைத்து ஜேம்ஸ் உல்லாசமாக இருக்கலாம் என்று குற்றாலத்துக்கு தப்பி சென்றார். ஆனால் அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும் அவர்கள் சூட்கேஸ் பெட்டியில் கொடுத்த உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புகளா? என ஆய்வு செய்வதற்காக மதுரையில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு நேற்று தெரிந்தது. அவை ஆட்டின் நாக்கு, மூளை, கல்லீரல் என்பது தெரியவந்தது. ஜேம்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் இதுபோன்று பலரிடம் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜேம்சிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.