அர்ச்சகரின் வேட்டியை இழுத்து அவமானம் - பெரியகுளத்தில் திமுகவினரை கண்டித்து பாஜக சாலைமறியல்
பெரியகுளம் கைலாச நாதர் கோயில் அர்ச்சகரின் வேட்டியை இழுத்து அவமானப்படுத்தியதாக திமுகவினரை கண்டித்து இந்து அற நிலையத்துறை அதிகாரி வாகனத்தை மறித்து பாஜகவினர் சாலை மறியல் செய்தனர்.
கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் தேனி மாவட்ட திமுகவினர் செய்த அத்துமீறல்களுக்கு துணைபோனதாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வாகனத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயிலில் நேற்றுமுன் தினம் மகா கார்த்திகை தீபம் ஏற்றுவதில் திமுகவினர் அத்துமீறி செயல்பட்டதாக கூறி அதனை கண்டிக்கும் விதமாகவும், கோயிலில் மகா கார்த்திகை தீபம் ஏற்றும்போது கோயிலின் அர்ச்சகரின் வேட்டியை பிடித்து இழுத்து மானபங்கம் படுத்திய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரின் செயலுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணியிடம் கேட்கும்போது, அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் தாங்கள் செயல்பட முடியும் எனக் கூறியதை கண்டித்தும்,
மகா கார்த்திகை தீபம் ஏற்றும் போது ஆகம விதிகளை கடைபிடிக்காமல் திமுகவினர் நடந்ததற்கு உறுதுணை போன இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும், பெரியகுளம் மாரியம்மன் கோயில் முன்பாக இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணியின் வாகனத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் பெரியகுளம் தென்கரை மார்க்கெட் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் சம்பவத்தை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றதோடு தொடர்ந்து இந்துக்களின் மனதை புண்படும் வகையில் நடக்கும் திமுகவின் செயலை கண்டித்து இந்து அமைப்பினர் நாளை மறுநாள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கலைவாணியிடம் கேட்டபோது பாரதிய ஜனதா கட்சியினர் கூறும் குற்றச்சாட்டை ஒருபோதும் தான் கூறவில்லை என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்