Neutrino project : ’நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி கொடுங்கள்’ வனத்துறைக்கு ஆய்வகம் சார்பில் விண்ணப்பம்..!
அம்பரப்பர் மலை அருகே வன உயிரினங்களே இல்லை என்று சான்று அளிக்கும்படி டாடா நிறுவனம் வனத்துறைக்கு விண்ணப்பித்துள்ளது.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க, அப்பகுதியில் வன உயிரினங்களே இல்லை என காட்டு உயிர் அனுமதி கோரி வனத்துறையிடம் நியூட்ரினோ திட்ட ஆய்வுக்குழு விண்ணப்பித்துள்ளது.
தேவாரம் அருகேயுள்ள T.புதுக்கோட்டை எனும் மலையடிவாரம் கிராமமான பொட்டிபுரம் அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கும் முயற்சியில் டாடா நிறுவனம் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறது.
மலையின் உச்சியிலிருந்து 1.3 கிலோ மீட்டருக்கு கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்திற்கு சுரங்கப் பாதை தோண்டப்படும் எனவும், இதையடுத்து மலையை குடைந்து பெரிய ஆய்வுக் கூடம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அங்கு 50 கிலோ டன் இரும்பிலான நியூட்ரினோ காணும் கருவி உருவாக்கப்பட்டு, அதனை சுற்றி நான்கு திசைகளிலும் மேலும், கீழும் குறைந்தபட்சம் ஒரு கி.மீ பரிமாணமுள்ள பாறை இருப்பதுபோல வடிவமைக்கப்படவுள்ளது. இந்நிலையில், அம்பரப்பர் மலையில் உள்ள பெரிய பாறைகள் மூலம்தான் வான்வெளியில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்ய முடியும் என கூறப்படுகிறது.
இதற்காக, முதற்கட்டமாக ஐ.என்.ஓ., கூடத்தில், காஸ்மிக் கதிர்கள் உண்டாக்கும் நியூட்ரினோக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும். இந்த நியூட்ரினோ திட்டமான அறிவியல் ஆய்வு மையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த டி.புதுக் கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன் பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நியூட்ரினோ எனும் திட்டத்தால் தங்கள் பகுதியில் விவசாயம் அழியும் நிலை ஏற்படும் எனவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் தேனி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனுவாக அளித்துள்ளதாக இப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.
அம்பரப்பர் மலையில் அமைக்கப்படும் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ 2015 மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது இதனை தொடர்ந்து 2016ல் பூவுலகின் நண்பர்கள் சார்பாக இந்த நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு அறிக்கையை போலியான நிறுவனத்தின் மூலம் வாங்கியதாக குறிப்பிட்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது காட்டு உயிர் அனுமதி கோரி வனத்துறைக்கு நியூட்ரினோ திட்ட ஆய்வுக்குழு சார்பாக டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பாக முல்லை பெரியாறு அணையிலிருந்து 3.50 கி.லிட்டர் தண்ணீரை இந்த நியூட்ரினோ திட்டத்திற்க்கு செலவிடவேண்டும் என்று கணக்கிட்டிருப்பதால், ஏற்கனவே விவசாயத்திற்க்கு போதிய தண்ணீர் இல்லாமல், குடிநீருக்கு பற்றாக்குறை உள்ள நிலையில் இந்த திட்டத்திற்க்கு இவ்வளவு தண்ணீரை செலவிடுவதால் தண்ணீர் பஞ்சத்தால் இப்பகுதி மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை என 5 மாவட்டங்களும் கடுமையாக கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே வனத்துறை இதற்கு அனுமதிக் கொடுக்கக் கூடாது என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.