டாஸ்மாக் வருவாய் இனி முழுவதும் அரசுக் கஜானாவுக்கு; திண்டுக்கல்லில் அமைச்சர் விக்னேஷ் உறுதி.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு மக்களின் நலன் மீது மட்டுமே அக்கறை, டாஸ்மாக் வருமானம் குறைவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை - அமைச்சர் விக்னேஷ் பேட்டி

திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான விக்னேஷ் திண்டுக்கல் வந்தார்.
திண்டுக்கல் பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களில் அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை சோதிக்கும் வகையில் உணவு அருந்திய அமைச்சர், அங்கு பணியாற்றும் பெண்களிடம் ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு மற்றும் பொதுப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனது பெற்றோர் இருவரும் பழனியைச் சேர்ந்தவர்கள் என்பதால் திண்டுக்கல் தனது இரண்டாவது சொந்த மாவட்டம் என்றார்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும், பயணிகளுக்கான இருக்கை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும் என உறுதியளித்தார். மேலும், புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். டாஸ்மாக் குறித்து பேசிய அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டுப்பாடின்றி FL-2 பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதன்மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், மக்கள் நலனே முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் முதன்மை நோக்கம் என்றும் தெரிவித்தார். மேலும், கடந்த பத்து நாட்களில் டாஸ்மாக் துறையில் தனிநபர்களுக்கு கமிஷனாக சென்றதாக கூறப்படும் ரூ.1,200 கோடி வருவாயை அரசுக் கஜானாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவே அரசின் முக்கிய சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார். வருங்காலங்களில் டாஸ்மாக் வருவாய் முழுமையாக அரசுக் கஜானாவிற்கே சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், திண்டுக்கல் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தொடர்ந்து அடிக்கடி வருகை தருவேன் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















