இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் தென் மேற்கு பருவ மழை.. முல்லை பெரியாறு அணையில் உயர்ந்த நீர்மட்டம்
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் இன்று(மே 27) பலத்த மழை பெய்யக்கூடுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) செவ்வாய்க்கிழமை (மே 27) உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்தப் புயல் சின்னம் நகரும் திசையின் அடிப்படையில் தமிழகத்தில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வனப்பகுதியில் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆறு, அணைகளுக்கான நீர்வரத்தும் உயரத் தொடங்கி உள்ளன. தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை முன்னதாகவே தொடங்கி உள்ளதால் தமிழக, கேரள எல்லையில் கடந்த சிலநாட்களாக அதிகமான மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வெகுவாய் அதிகரித்துள்ளது. கடந்த 23-ம் தேதி விநாடிக்கு 100 கனஅடியாக இருந்த நீர்வரத்து கனமழையினால் படிப்படியாக அதிகரித்து நேற்று (மே 26) 584 கனஅடியாக உயர்ந்தது.
இந்நிலையில், இன்று (மே 27) காலை 6 மணிக்கு ஆயிரத்து 648 கனஅடியாக உயர்ந்தது. பிற்பகலில் இதன் அளவு 5205-க்கு மேல் அதிகரித்தது. நீர்மட்டத்தைப் பொறுத்தளவில் ஞாயிறன்று 114.90 அடியாக இருந்த நிலையில் திங்கள்கிழமை மாலை 116 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் தேனிமாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணைப்பகுதிகளில் அதிகபட்சமாக 55.8 மிமீ.மழை அளவும், தேக்கடியில் 36.2 மிமீ மழையும் பெய்தது.
இதேபோல் சோத்துப்பாறையில் 13 மிமீ. மழை பெய்தது. மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையடிவாரத்தை நோக்கி நீர்வரத்து அதிகரித்துள்ளது.வைகையின் துணை ஆறுகளின் நீாராதாரத்தைப் பொறுத்தளவில் மேற்குத் தொடர்ச்சி மலையையே சார்ந்துள்ளன. தற்போது மலையில் ஏற்பட்ட மழைப்பெருக்கால் கொட்டக்குடி, வராகநதி, சுருளிஆறு, மஞ்சளாறு உள்ளிட்ட பல ஆறுகளிலும் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதேபோல் மூலவைகையின் முகத்துவாரத்திலும் நீர்வரத்து தொடங்கியுள்ளது.
இதனால் சோத்துப்பாறை, வைகைஅணை உள்ளிட்ட அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கம்பம் அருகே உள்ள பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கும் சுருளி அருவிக்கு வரும் நீர் வரத்து அதிகரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று காலை முதல் தற்போது வரையில் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியிலும் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.
வைகை அணை
நிலை- 52.99 (71)அடி
கொள்ளளவு:2409 Mcft
நீர்வரத்து: 426கனஅடி
வெளியேற்றம் : 72குசெக்வெசிட்டி:2511 Mcft
மஞ்சலார் அணை:
நிலை- 39.60(57) அடி
கொள்ளளவு:180.13Mcft
வரத்து: 15 கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்
சோத்துப்பாறை அணை:
நிலை-93.97 (126.28) அடி
கொள்ளளவு: 56.63Mcft
நீர்வரத்து: 3கனஅடி
வெளியேற்றம்: 3 கனஅடி
சண்முகநதி அணை:
நிலை-43.50 (52.55)அடி
கொள்ளளவு:52.77 Mcft
வரத்து: 9கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்.





















